அரியலூரில், மாந்திரீகம் செய்வதாக கூறி, 12 லட்ச ரூபாய் மோசடி செய்த மூவரை, சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
அரியலூரைச் சேர்ந்தவர் விஜயகுமார். கடந்த மாதம் இவரது கைப்பேசியில் தொடர்புக் கொண்டு பேசிய நபர்கள், தங்களுக்கு பில்லி சூனியம் இருப்பதாகவும், கொல்லிமலைச் சென்று பரிகாரம் செய்ய வேண்டும் என்றும் அதற்கான தொகையை தனது வங்கிக் கணக்கில் செலுத்துமாறு கூறியுள்ளார்.
இதனை நம்பிய விஜயகுமார் வங்கி மூலமாகவும், நேரடியாகவும் ரூ.12 லட்சம் அனுப்பியுள்ளார். பின்னர் தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த விஜயகுமார், இது குறித்து அரியலூர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கடந்த 4 ஆம் தேதி புகார் அளித்தார்.
அதன் பேரில், காவல் துறையினர் வழக்குப் பதிந்து மேற்கொண்ட விசாரணையில், திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த சத்யா மகன்கள் வல்லராஜ்(25), கிருஷ்ணன்(எ) தர்மராஜ்(24), சேலம் மாவட்டம், சீலநாயக்கன்பட்டியைச் சேர்ந்த மாடசாமி மகன் சனியன்(எ)குமார் (39) ஆகிய 3 பேரும், சேலம் மாவட்டம், எருமபாளையம் பேருந்து நிலையத்துக்கு வரும் பொதுமக்களிடம், கைரேகை பார்ப்பதாகக் கூறி, தங்களுக்கு தோஷம், செய்வினை உள்ளதாக தெரிவித்து அவர்களது கைப்பேசி எண்களைப் பெற்று, பின்னர் அவர்களது கைப்பேசி எண்களில் தொடர்புக் கொண்டு, தாங்கள் பரிகாரம் செய்யவில்லை என்றால் தங்கள் வீட்டில் அசம்பாவிதங்கள் நடைபெறும் என அச்சுறுத்தி பணம் பறித்து வந்துள்ளது தெரியவந்தது.
Also read... மூட்டைக்கு 30 ரூபாய்.. நெல் கொள்முதலுக்கு லஞ்சம் வாங்கிய பொறுப்பாளர் கைது
இதையடுத்து காவல் துறையினர் 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரூ.6,30,000 மதிப்புள்ள வீட்டு உபயோகப் பொருள்கள் மற்றும் கார், இரண்டு இரு சக்கர வாகனங்கள், 10 பவுன் நகைகள் உள்ளிட்டவைகளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
-செய்தியாளர்: கலைவாணன். இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.