மதுபோதையில் தகராறு செய்த கணவனை கொன்று, வீட்டருகே குழிதோண்டிப் புதைத்த மனைவி, 11 ஆண்டுகளுக்கு பின் தந்தை, அக்காளுடன் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள ஜமீன் குளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குணசேகரன். இவரது மனைவி ஜெயந்தி. கடந்த 2011ஆம் ஆண்டு, காணும் பொங்கல் அன்று குணசேகரன் மதுபோதையில் வீட்டில் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஜெயந்தி அவரை கீழே தள்ளி விட்ட போது தலையின் பின்புறம் அடிபட்டு அவர் இறந்து விட்டார். இதனைத் தொடர்ந்து ஜெயந்தி மற்றும் அவரது அக்கா ஜோதி, தந்தை மகாராஜன் ஆகிய 3 பேரும் சேர்ந்து வீட்டின் தோட்டத்தில் அவரை புதைத்துள்ளனர்.
இந்நிலையில் குணசேகரனின் அக்கா லட்சுமி ஜெயந்தியிடம் தனது தம்பியை பார்க்க முடியவில்லை என அடிக்கடி கேட்டபோது கொலை வழக்கில் தொடர்புடைய குணசேகரன் வழக்கிற்கு பயந்து கேரளாவுக்கு தப்பி சென்றதாகவும் அங்கு வேலை பார்த்து வருவதாகவும் 15 நாட்களுக்கு ஒரு முறை போன் செய்து பேசுவதாகவும் தெரிவித்துள்ளார். ஆண்டுகள் பல ஓடிய பிறகு தம்பி இன்னும் வரவில்லை என்ற காரணத்தினால் ஊரில் விசாரித்தபோது அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் லட்சுமி ஆண்டிமடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையில், ஈடுபட்ட போது ஜெயந்தி அவரது கணவரை கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் புதைத்த பிணத்தை பின்னர் எடுத்து எரியூட்டி அதனை ஆற்றில் கரைத்தாகவும் தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து ஜெயந்தி, அவரது அக்கா ஜோதி, தந்தை மகாராஜன் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.