Home /News /tamil-nadu /

தாசில்தார் வாகனம் மீது தாக்குதல்.. கைது அச்சத்தில் காவல் நிலையம் முன்பு தற்கொலை முயற்சி

தாசில்தார் வாகனம் மீது தாக்குதல்.. கைது அச்சத்தில் காவல் நிலையம் முன்பு தற்கொலை முயற்சி

தற்கொலை முயற்சி

தற்கொலை முயற்சி

கமலகண்ணன் தனது ஊரிலிருந்து புறப்பட்டு மீன்சுருட்டி காவல் நிலையத்திற்கு முன்பாக  விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார்.

அரியலூரில்  மஞ்சு விரட்டு  போட்டிக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில் தாசில்தார் மற்றும் அவரது வாகனம் தாக்கப்பட்ட வழக்கில் தேடப்பட்ட நபர் மீன்சுருட்டி காவல் நிலையம் முன்பு விஷம் அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். தனது இறப்புக்கு காரணம் விஏஓ, தாசில்தார், இன்ஸ்பெக்டர் என வீடியோ வாக்குமூலம் வெளியிட்ட நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சுத்துக்குளம் கிராமத்தில் பிரசித்திபெற்ற முனீஸ்வரன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்தில் திருவிழா நடைபெற்று மஞ்சுவிரட்டு நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கோவில் திருவிழா மற்றும் மஞ்சுவிரட்டு காண ஏற்பாடுகளை  கிராம மக்கள் செய்திருந்தனர். இதில் கோவில் திருவிழாவுக்கு மட்டும் அனுமதி கொடுக்கப்பட்டு, மஞ்சுவிரட்டு விழா நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இந்த நிலையில் தடையை மீறி அக்கிராமத்தில் மஞ்சுவிரட்டு விழா நடத்துவதற்காக வாடிவாசல் அமைக்கப்பட்டு விழாவிற்கான ஏற்பாடுகளை அக்கிராம மக்கள் செய்திருந்தனர். பின்னர் இதுபற்றி தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் தாசில்தார் ஆனந்தன் தலைமையிலான வருவாய்த் துறையினர் மற்றும் போலீசார் அன்றிரவு பேச்சுவார்த்தை நடத்தி, அங்கு அமைக்கப்பட்டிருந்த வாடிவாசல் மற்றும் மேடைகளை அகற்றுமாறு கேட்டுக்கொண்டனர்.

இதில் உடன்பாடு ஏற்படாததை அடுத்து அதிகாரிகள் தரப்பில் ஜேசிபி எந்திரம் கொண்டு விழா மேடைகளை அகற்றினர். இதில் ஆத்திரமடைந்த அக்கிராமத்தைச் சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட கும்பல் தாசில்தார் வாகனத்தை சூழ்ந்துகொண்டு தாசில்தார்‌ மற்றும் அவரது வாகனத்தை தாக்கியதாக அக்கிராம நிர்வாக அலுவலர் வேல்முருகன் மீன்சுருட்டி போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் 47 பேர் மீது வழக்கு பதிவு செய்து 18 பேரை கைது செய்திருந்தனர்.

இதையும் படிங்க: விருதுநகர் பாலியல் குற்றச்சாட்டில் கைதான ஜுனைத் அகமது திமுகவில் இருந்து நீக்கம்.. துரைமுருகன் அறிவிப்பு


மேலும் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருப்பதற்காக வேண்டி சுத்துக்குளம் கிராமத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மற்றவர்களை போலீசார் தேடி வந்த நிலையில்,  கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி அருகே உள்ள வீரானந்தபுரம் பெரியபுங்கநதி கிராமத்தைச் சேர்ந்த கமலகண்ணன் என்பவரின் வீட்டிற்கு  போலீசார் தேடி சென்றுள்ளனர்.

இந்த செய்தி அறிந்த கமலகண்ணன் தனது ஊரிலிருந்து புறப்பட்டு மீன்சுருட்டி காவல் நிலையத்திற்கு முன்பாக  விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார்.

மேலும் படிக்க: குடித்து விட்டு ரகளையில் ஈடுபட்டதால் தந்தையின் தலையில் கல்லை போட்டு கொன்ற மகன் கைது!


இதையடுத்து காவல்துறையினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீன்சுருட்டி அரசு மருத்துவமனைக்கு அவரை அனுப்பி வைத்தனர்.  அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் ஜெயங்கொண்டம் சிதம்பரம் ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் கமலகண்ணன் சிகிச்சை பெற்று வருகிறார்.

இவர் தற்கொலைக்கு முயல்வதற்கு முன்பாக தன் தற்கொலைக்கு வீஏஓ, தாசில்தார், காவல்துறையினருமே காரணம் என எழுதிய கடிதம் மற்றும் வீடியோ பதிவை நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published by:Murugesh M
First published:

Tags: Ariyalur, Suicide attempt

அடுத்த செய்தி