என்.பி.ஆருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றாதது ஏன்? மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு இடையே காரசார விவாதம்

என்.பி.ஆருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றாதது ஏன்? மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு இடையே காரசார விவாதம்
ஸ்டாலின், ஆர்.பி.உதயகுமார்
  • Share this:
என்.பி.ஆர் விவகாரம் தொடர்பாக எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும், அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

சட்டப்பேரவையில் இன்று நேரமில்லா நேரத்தின்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், என்.பி.ஆர் கேள்விகள் குறித்து மக்கள் அச்சத்தில் இருப்பதாகவும், இதுகுறித்து தமிழக அரசு மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்துக்கு பதில் வந்ததா? என கேள்வி எழுப்பினார். மேலும் பா.ஜ.க கூட்டணியில் உள்ள கட்சிகள் கூட தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு அவர்களது மாநிலத்தில் என்.பி.ஆருக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில், தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.

அதற்கு பதிலளித்த வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், மத்தியில் திமுக அங்கம் வகித்தபோது தான் என்.பி.ஆர் கொண்டுவரப்பட்டதாகவும், என்.பி.ஆரில் எந்தவொரு குறிப்பிட்ட மதத்தை குறித்து கேள்விகள் முன்வைக்கவில்லை எனவும், தமிழக அரசு எழுதிய கடிதத்துக்கு தற்போதுவரை பதில் வரவில்லை என விளக்கம் அளித்தார். மேலும், வண்ணாரப்பேட்டை போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் முதல்வரை சந்தித்த போது, அவர்களிடத்தில், சிறுபான்மையின மக்களுக்கு அதிமுக அரசு எப்போதும் ஆதரவாக இருக்கும் என முதல்வர் உத்தரவாதம் அளித்ததை சுட்டிக்காட்டினார்.


மீண்டும் பேசிய ஸ்டாலின், மத்தியில் திமுக அங்கம் வகித்த போது இருந்த கேள்விகளை காட்டிலும், தற்போது வெளியிடப்பட்டுள்ள என்.பி.ஆரில் கூடுதல் விவரங்களை கேட்கப்பட்டுள்ளதாகவும், 2010 ல் நடத்தப்பட்டது வெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு தான் எனவும், தற்போது எடுப்பது, என்.ஆர்.சி தயாரிக்க எடுக்கப்படுகிறது என்பது படிவங்கள் மூலம் வெளிப்படையாக தெரிகிறது என பேசினார். என்.பி.ஆர் என்பது மக்களை மதரீதியாக பிளவுபடுத்தக்கூடிய, தேசிய குடியுரிமை பதிவேடு நாட்டின் சமூக நல்லிணக்கத்தை பன்முகத்தன்மையை சிதைக்கக்கூடிய வகையில் கொண்டு வரப்பட்டுள்ளது என குற்றம்சாட்டினார்.

மீண்டும் பேசிய அமைச்சர் உதயகுமார், 2010 ஆம் ஆண்டை போல தான் 2020 ஆன் ஆண்டிலும் விவரங்கள் கேட்கப்படுகிறது எனவும், அதற்கான ஆவணங்கள் எதையும் வழங்க தேவையில்லை என பதிலளித்தார்.

மீண்டும் எழுந்த ஸ்டாலின் என்.பி.ஆர்.அமல்படுத்த மாட்டோம் என தீர்மானம் நிறைவேற்றுவதில் என்ன பிரச்சனை என கேள்வி எழுப்பினார்.அதற்கு பதிலளித்த அமைச்சர் உதயக்குமார், நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்துக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினால் அது இந்திய அரசியலமைப்பு சட்டத்தை எப்படி கட்டுப்படுத்தும்? நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்துக்கு மாநில சட்டமன்றம் கட்டுப்பட்டது என பதிலளித்தார்.

அதற்கு பதிலளித்த எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்ட பிறகு கடிதம் எழுதியுள்ளீர்கள், நீங்கள் கூறும் விளக்கத்தை எப்படி ஏற்றுக்கொள்வது என கேள்வி எழுப்பினார்.

மீண்டும் பேசிய அமைச்சர் உதயக்குமார், விளக்கம் கேட்பதில் என்ன தவறு இருக்கிறது. என்.பி.ஆர் தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என சுட்டிக்காட்டினார்.

பின்னர் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவைப் பொறுத்தவரை ஜாதி மதத்துக்கு அப்பாற்பட்ட இயக்கம் எனவும், எந்த ஒரு சமுதாயத்திற்கு எந்த தீங்கு ஏற்பட்டாலும் அதை தடுத்து நிறுத்துகின்ற ஆட்சியாக தான் அதிமுக அரசு இருக்கும் எனவும், சிறுபான்மை மக்களுக்கு எந்த பாதிப்பு வந்தாலும் அதை தடுத்து நிறுத்துகின்ற அரசாக தான் அதிமுக அரசு இருக்கும் என பதிலளித்தார்.

என்.பி.ஆரை அமல்படுத்த மாட்டோம் என அரசு அறிவிக்காததால் திமுக உட்பட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

Also see:


 
First published: March 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading