பாஜக ஆட்சியில் மதக் கலவரம் நடைபெறவில்லை.. காங்கிரஸ் ஆட்சியில்தான் அதிக குண்டு வெடிப்புகள் நடந்தன - அண்ணாமலை

அண்ணாமலை பிரச்சாரம்

அரவக்குறிச்சி தொகுதி பாஜக வேட்பாளரும் அக்கட்சியின் மாநில துணைத்தலைவருமான அண்ணாமலை பள்ளப்பட்டி பேரூராட்சி பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாஜக, கூட்டணி கட்சி தொண்டர்களுடன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார் அப்போது பேசுகையில், பாஜக ஆட்சியில் மதக் கலவரம் நடைபெறவில்லை என்று கூறினார்.

  • Share this:
    அரவக்குறிச்சி தொகுதி பாஜக வேட்பாளரும் அக்கட்சியின் மாநில துணைத் தலைவருமான அண்ணாமலை பள்ளப்பட்டி பேரூராட்சி பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாஜக, கூட்டணி கட்சி தொண்டர்களுடன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார் அப்போது பேசுகையில், பாஜக ஆட்சியில் மதக் கலவரம் நடைபெறவில்லை என்று கூறினார்.

    அரவக்குறிச்சி தொகுதி பள்ளப்பட்டியில் 90 சதவீதம் இஸ்லாமிய மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாஜக வேட்பாளரை பள்ளப்பட்டிக்குள் அனுமதிக்க மாட்டோம் என ஜமாத் சார்பில் அறிவிப்பு செய்திருந்தனர்.

    இதையடுத்து பாஜக வேட்பாளர் அண்ணாமலை பள்ளப்பட்டி இந்தியாவுக்குள்தான் உள்ளது. இதை மறந்து விடக் கூடாது. 8 பேர் ஜமாத்தில் அமர்ந்து கொண்டு அவர்கள் போடும் சட்டத்தை ஏற்க முடியாது. பாரதிய ஜனதா பள்ளப்பட்டியில் பிரச்சாரம் செய்யும் இதை யாரும் தடுக்க முடியாது என காரசாரமான பேட்டி அளித்திருந்தார்.

    அதைனைத் தொடர்ந்து திட்டமிட்டபடி பள்ளப்பட்டி பேரூராட்சி பகுதியில் அண்ணாமலை தனது ஆதரவாளர்களுடன் தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது, பிரச்சார வாகனம் முன்பும், பின்பும், கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.

    அப்போது பேசிய அண்ணாமலை, இந்த பகுதியில் வெறுப்பு அரசியல் செய்து வருகின்றனர். திமுக எங்கள் மீது பொய் பிரச்சாரம் செய்து வருகின்றது. காங்கிரஸ், பாஜக ஆட்சி இரண்டில் இஸ்லாமியர்களுக்கு அதிக பல நலத் திட்டங்களை வழங்கியது பாஜக ஆட்சி தான்.

    மத அரசியல் செய்வதாக எங்களை குற்றச்சாட்டும் காங்கிரஸ் ஆட்சியில்தான் அதிக குண்டு வெடிப்பு நிகழ்வுகள் நடந்தது. பாஜக 7 ஆண்டுகளில் எங்கேயும் குண்டு வெடிப்பு நடைபெறவில்லை. ஒரு சில இடங்களில் மட்டுமே அது போன்ற நிகழ்வு நடந்தது. பாஜக ஆட்சியில் மத கலவரம் நடைபெறவில்லை.



    கரூர் எம்.பி. ஜோதிமணி என்னை பள்ளப்பட்டிக்குள் விட கூடாது என பிரிவினையை ஏற்படுத்தி, மதக் கலவரத்தை தூண்டிவிடுகிறார். அவர் வகிக்கும் பதவியை நாஜினாமா செய்ய வேண்டும் என கண்டித்தார்.

    சிஏஏ, என்ஆர்ஐ குறித்து விஷம பிரச்சாரத்தை காங்கிரஸ் கட்சியும் அதன் கூட்டணி கட்சிகளும் செய்து வருகிறது. அந்த சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. உங்களிடம் ஓட்டு கேட்டு வரவில்லை. எங்களுடைய கொள்கையை எடுத்து கூறவந்துள்ளேன். யார் ஓட்டு போட்டாலும், போடாவிட்டாலும் நாங்கள் வெற்றி பெறுவோம். நீங்கள் எங்களுக்கு ஓட்டுப் போட விட்டாலும் பள்ளப்பட்டி பகுதியில் 3,500 க்கும் மேற்பட்டோர் வீடு இல்லா இஸ்லாமியர்களுக்கு நாங்கள் வீடு கட்டிக் கொடுப்போம்.

    6 மாதத்தில் வீடு கட்டி கொடுப்பேன். அப்படி செய்யவில்லை என்றால் நான் ராஜினாமா செய்து இந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் என தெரிவித்தார். சிஏஏ குறித்து காங்கிரஸ், திமுக, கரூர் காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி விஷமத்தனமான பிரச்சாரத்தை இங்கு செய்து வருகின்றனர் என்றார். தொடர்ந்து பேசிய அண்ணாமலை, அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பள்ளப்பட்டி பகுதியில் ஏப்ரல் 1 ஆம் தேதி உள்துறை அமைச்சர் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள வருகிறார் என்று கூறினார்.

    இந்நிலையில், பள்ளப்பட்டி ஷா நகர் பகுதியில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை வாக்கு சேகரித்தபோது, ஒரு இஸ்லாமியர் குரான் நூல் கொடுத்து அவரை வரவேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    - செய்திளார்,  தி.கார்த்திகேயன்
    Published by:Suresh V
    First published: