ஜெயலலிதா மரணம் குறித்து ஆய்வு செய்துவரும் விசாரணை ஆணையம் ஒரு மருத்துவ நிபுணர் குழுவை அமைக்க வேண்டும் என்று அப்போலோ தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் செயல்பட்டுவருகிறது. ஜெயலலிதாவின் உதவியாளர்கள், அரசு அதிகாரிகள், அப்போலோ மருத்துவர்களிடம் விசாரணை ஆணையம் விசாரணை நடத்திவருகிறது.
இந்தநிலையில் அப்போலோ நிர்வாகத்தின் சார்பில் சட்டப்பிரவு மேலாளர் மோகன்குமார் விசாரணை ஆணையத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், ‘அப்பல்லோ மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் ஆணையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளனர். அவர்களில் பலர் பலமுறை ஆஜராகி வாக்குமூலம் கொடுத்துள்ளனர். 3 ஆயிரம் பக்கத்துக்கும் மேற்பட்ட ஜெயலலிதா சிகிச்சை குறித்த மருத்துவ ஆவணங்களை அப்பல்லோ நிர்வாகம் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளது.

அப்போலோ மருத்துவமனை
இந்த மருத்துவ ஆவணங்களை ஆய்வு செய்து ஆணையத்துக்கு உதவ மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவை ஏற்படுத்திக்கொள்ள தமிழக அரசிடம் ஆணையம் அனுமதி கோரியது.
இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு, மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழுவை ஏற்படுத்திக்கொள்ள ஆணையத்துக்கு அனுமதி அளித்தது.
இருந்தபோதிலும் மருத்துவ நிபுணர்கள் குழுவை ஆணையம் ஏற்படுத்தவில்லை. இதனால் ஜெயலலிதா சிகிச்சை விவகாரத்தில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ நடைமுறைகள், மருத்துவ உண்மைகள் குறித்து அப்பல்லோ மருத்துவர்கள் வாக்குமூலம் அளிக்கும்போது பல்வேறு சவால்களை சந்திக்க வேண்டியது உள்ளது.
இதன் காரணமாக அப்பல்லோ மருத்துவர்களின் வாக்கு மூலத்தை ஆணையம் பதிவு செய்யும்போது ஏராளமான தவறு ஏற்படுகிறது.
மருத்துவம் தொடர்பான வார்த்தைகளை தமிழில் மொழியாக்கம் செய்யும்போது தவறாக புரிந்து கொண்டு பதிவு செய்யப்படுகிறது. இதுபோன்று வாக்குமூலத்தை பதிவு செய்யும்போது மருத்துவ சிகிச்சை தொடர்பான உண்மைகள் தவறாக எடுத்துக்கொள்ளப்படும்.
அப்போலோவில் 21 துறைகளைச் சேர்ந்த மருத்துவர்கள் மூலம் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. எனவே, இந்தத் துறைகளிலிருந்து ஒரே ஒரு மருத்துவராவது ஆணையம் அமைக்கும் குழுவில் இடம் பெறவேண்டும்.
இல்லையெனில், ஜெயலலிதா தொடர்பாக தவறான கருத்தை ஆணையம் பதிவு செய்யும். ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ மருத்துவமனை மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர்களை போன்று கல்வித்தகுதி மற்றும் அனுபவம் உள்ளவர்களாகளோ அல்லது அதைவிட அதிக கல்வித்தகுதி மற்றும் அனுபவம் உள்ளவர்களாகவோ மருத்துவக் குழுவில் இருக்க வேண்டியது அவசியமாகிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Also see:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.