மறைந்த முதலமைச்சர்
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆறுமுகசாமி ஆணையத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. ஜெயலலிதாவின் உறவினர்கள், பாதுகாவலர்கள், மருத்துவர்கள் அரசு உயர் அதிகாரிகள் என இதுவரை 150க்கும் மேற்பட்டோர் ஆணையத்தில் ஆஜராகி விளக்கமளித்துள்ளனர். மருத்துவர்களை விசாரிக்கும்போது மருத்துவ குழு வல்லுனர்கள் முன்னிலையில் விசாரணை நடத்த வேண்டும் என அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக விசாரணை நடைபெற முடியாத சூழல் இருந்து வந்தது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, எய்ம்ஸ் இயக்குனர் பரிந்துரையின் படி 6 பேர் கொண்ட மருத்துவக் குழு அமைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக விசாரணையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வது தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், சசிகலா தரப்பு மற்றும் அப்போலோ தரப்பு வழக்கறிஞர்கள் பல்வேறு பரிந்துரைகளை வழங்கினர்.
முடிவில் அப்போலோ மருத்துவர்கள் 11 பேர் குறுக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது. அவர்களிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜாசெந்தூர்பாண்டியன் குறுக்கு விசாரணை செய்தார். அதன்படி, நேற்று நடந்த முதல்நாள் விசாரணையில், அப்போலோ மருத்துவர்கள் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். அதில், 2016ஆம் ஆண்டு ஜெயலலிதா தொடர்ந்து இரண்டாவது முறையாக முதலமைச்சராக பதவியேற்கும் நாளுக்கு முன்னதாக ஜெயலலிதாவுக்கு தலை சுற்றல், மயக்கம், துணையில்லாமல் நடக்க முடியாத சூழல் ஆகிய பிரச்னை இருந்தது என அப்பல்லோ மருத்துவர் பாபு மனோகர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்தார்.
மருத்துவர் சிவக்குமார் அழைத்ததின் பேரில், ஜெயலலிதா பதவியேற்புக்கு முந்தைய நாள் போயஸ் கார்டன் சென்று அவரை சந்தித்தேன் என்று கூறிய பாபு மனோகர், ஜெயலலிதாவுக்கு சில மருந்துகளை பரிந்துரைத்ததோடு, சில உடற்பயிற்சிகளை மேற்கொள்ளவும் பரிந்துரைத்ததாகவும், சிறுதாவூர் அல்லது ஊட்டி சென்று சில நாட்கள் ஓய்வு எடுக்குமாறு பரிந்துரைத்ததாகவும், ஆனால், நாள் ஒன்றுக்கு 16 மணி நேரம் வேலை இருப்பதாக கூறிய ஜெயலலிதா ஓய்வெடுக்க மறுத்துவிட்டார் என்றும் வாக்குமூலம் அளித்தார்.
Read More : கண்களைக் கட்டிக் கொண்டு மகளிர் தினத்தில் சாதனை : அசத்திய அரசுப் பள்ளி மாணவி!
இந்நிலையில், ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் இன்று நடந்த 2 ஆம் நாள் விசாரணையில், ஜெயலலிதா இறப்பதற்கு முந்தைய நாட்களில் அவருக்கு உயிரை காக்கும் அனைத்து சிகிச்சைகளும் அளிக்கப்பட்டதா? என்பது தொடர்பாக சசிகிலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் அப்போலோ மருத்துவரிடம் அடுக்கடுக்கான கேள்வி எழுப்பினார்.
அப்போது அப்பல்லோ மருத்துவர் மதன்குமார், ஜெயலலிதாவுக்கு 2016ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி மாலை ஏற்பட்டது கார்டியாக் அரெஸ்ட் தான் எனவும், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறையில் மருத்துவ முறைகள் அனைத்தையும் முறையாக பின்பற்றினோம் எனவும் தெரிவித்தார்.
Must Read : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாகனம் மீது டம்ளரை வீசிய டீ மாஸ்டர்..
மேலும் ஜெயலலிதா இறப்பதற்கு முன்பு 4 மற்றும் 5ஆம் தேதி அப்போலோ மருத்துவ குழு எவ்வாறு செயல்பட்டது எனவும், அது திருப்தி அளிக்கிறதா எனவும் கேள்வி எழுப்பப்பட்டது. அத்துடன், எய்ம்ஸ் மருத்துவர்கள் ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை மற்றும் ஆணையத்தில் அளித்த வாக்குமூலங்களையும் சுட்டிகாட்டி அப்போலோ மருத்துவரிடம் குறுக்கு விசாரணை நடைபெற்றது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.