Home /News /tamil-nadu /

உச்ச நீதிமன்ற வாயிலில் அ.தி.மு.க உட்கட்சி விவகாரம்: ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் முன்பிருக்கும் வாய்ப்புகள் என்ன?

உச்ச நீதிமன்ற வாயிலில் அ.தி.மு.க உட்கட்சி விவகாரம்: ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் முன்பிருக்கும் வாய்ப்புகள் என்ன?

ஓபிஎஸ் - ஈபிஎஸ்

ஓபிஎஸ் - ஈபிஎஸ்

அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை விசாரணையைத் தொடரவுள்ளது.

தமிழக அரசியல் களத்தை கடந்த 20 நாட்களுக்கும் மேலாக அ.தி.மு.க உட்கட்சி மோதல் விவகாரம் ஆக்கிரமித்துள்ளது. அதன் உச்சகட்டமாக கடந்த மாதம் 23-ம் தேதி நடைபெற்ற பொதுக் குழு கூட்ட நிகழ்வுகள் அமைந்தன. பொதுக்குழு கூட்டத்துக்கு முந்தைய நாளில் அடுத்தடுத்து வந்த நீதிமன்றத் தீர்ப்புகள் தமிழ்நாட்டின் அரசியல் களத்தை மாற்றியமைத்தன.

தமிழ்நாட்டு அரசியலை பரபரப்பின் அடுத்தக் கட்டத்துக்குக் கொண்டு சென்றன என்றே கூறலாம். பொதுக்குழு கூட்ட குழப்பங்களுக்குப் பிறகும் கட்சியில் எடப்பாடி பழனிசாமியின் கையே ஓங்கியிருக்கிறது. ஒருபுறம் ஓ.பன்னீர் செல்வத்தின் தரப்பு நீதிமன்றப் படிகளை நாடியுள்ளது. மறுபுறம் எடப்பாடி பழனிசாமி தரப்பு பொதுக்குழு கூட்டத்தை நடத்திவிடுவதில் உறுதியாக உள்ளது.

இருப்பினும், பொதுக்குழு கூட்டத்தை கூட்டுவதற்கு அ.தி.மு.கவில் தற்போது யாருக்கு அதிகாரம் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. எடப்பாடி பழனிசாமி தரப்பு கட்சிக்கு தற்போது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று யாரும் கிடையாது. எனவே, அவைத் தலைவருக்கு பொதுக்குழு கூட்டத்தை கூட்டும் அதிகாரம் உள்ளது என்ற வாதத்தை முன்வைக்கின்றனர்.

ஓ.பன்னீர் செல்வம் தன்னை அ.தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளராக வெளிப்படுத்திவருகிறார். மாறாக எடப்பாடி பழனிசாமி, தன்னை தலைமைக் கழக செயலாளர் என்று முன்னிறுத்திவருகிறார். இதில், எந்த தரப்பின் வாதம் சரியானது என்பதை நீதிமன்றமோ அல்லது தேர்தல் ஆணையம் தான் உறுதி செய்யவேண்டும்.

பொதுக்குழு கூட்டம் தொடர்பாக நீதிமன்றம் முன்பிருக்கும் வழக்குகள்:

ஜூன் 11-ம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கும் கூட்டத்துக்கு தடைவிதிக்க வேண்டும் என்று அக்கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கில், நேற்று உத்தரவிட்ட உயர் நீதிமன்றம் ஜூலை 11 பொதுக்குழு கூட்டத்தை பொறுத்தவரை தலையிட முடியாது என திட்டவட்டமாக மறுத்து, ஜூன் 23ம் தேதி நடந்த நிகழ்வுகளை சமர்ப்பிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 7ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

கொரோனாவுக்கு சென்னையில் ஒருவர் பலி.. தமிழகத்தில் 2,662 பேருக்கு தொற்று உறுதி..

11ஆம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழுவிற்கு தடைக்கோரி ஓ.பன்னீர்செல்வம் சார்பில் இன்று புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை அவசர வழக்காக விசாரிக்கக்கோரி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு முறையீடு செய்யப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, நாளை இந்த வழக்கை விசாரிக்க ஒப்புதல் வழங்கியுள்ளார்.

அதேபோல, ஜூன் 23-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்களைத் தவிர்த்து வேறு புதிய தீர்மானங்களை நிறைவேற்றக் கூடாது என்றும், கட்சி விதிகளில் திருத்தம் செய்யக் கூடாது என்றும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர்மோகன் அமர்வு உத்தரவிட்டிருந்தது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து பழனிசாமி மற்றும் அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களான நத்தம் விஸ்வநாதன், பெஞ்சமின் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அந்த மனுவில், ‘அதிமுகவில் பொதுக்குழுவின் முடிவே முதன்மையானது. செயற்குழு, பொதுக்குழுவில் எடுக்கும் முடிவுகள் கட்சிசார்ந்த பெரும்பான்மை உறுப்பினர்களின் ஒருமித்த முடிவு என்பதால் அதில் நீதிமன்றம் தலையிட முடியாது. மீறி தலையிட்டது கட்சியின் ஜனநாயகத்தை சீர்குலைக்கும் செயல். எனவே இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’ என கோரப்பட்டிருந்தது.

இந்த மனு நாளை விசாரணைக்கு வரவுள்ளது. அந்த மனுவில் தங்கள் தரப்பு வாதத்தைக் கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என்று ஓ.பன்னீர் செல்வமும், பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அ.தி.மு.கவின் உட்கட்சி விவகாரம் உயர் நீதிமன்றத்தைக் கடந்து உச்ச நீதிமன்றத்தின் கதவுகளை எட்டியுள்ளது. அ.தி.மு.கவின் பொதுக்குழு விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றம் ஏதேனும் முக்கிய உத்தரவைப் பிறப்பித்தால் அந்த உத்தரவுக்கு எதிராக உயர் நீதிமன்றம் வேறு எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது.

ஆனால், உச்ச நீதிமன்றம் தீர்ப்பு ஏதேனும் தரப்புக்கு எதிராக அமையும் பட்சத்தில் அவர்கள் உடனடியாக மேல்முறையீட்டை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே, பொதுக்குழு கூட்டம் நடைபெறுமா? இல்லையா? என்பது உச்ச நீதிமன்றத்தின் கைகளுக்கு சென்றுவிட்டது. அ.தி.மு.கவின் எதிர்காலம் உச்ச நீதிமன்றத்தில் தீர்மானிக்கப்படும் சூழல் உள்ளது.

ஒருவேளை திட்டமிட்டபடி ஜூலை 11-ம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றாலும் அதற்கு சட்ட அங்கீகாரம் எந்த அளவிற்கு உண்டு என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
Published by:Archana R
First published:

Tags: ADMK, Edappadi Palaniswami, O Panneerselvam

அடுத்த செய்தி