ஆந்திர மாநிலத்தில் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்தவரை காதலித்த பெண்ணை அவரது தந்தையே கொலை செய்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரப் பிரதேசம், பிரகாசம் மாவட்டம், கொம்மரோலுவை அடுத்த நாகிரெட்டிபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சைதன்யா. இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஆவுலையா என்பவரின் மகள் இந்திரஜாவை காதலித்து வந்தார். இந்திரஜாவும், சைதன்யாவும் கித்தலூரில் உள்ள தனியார் கல்லூரியில் ஒன்றாக படித்து வந்தனர்.
இவர்கள் சொந்த ஊரில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கல்லூரிக்கு தினமும் பேருந்தில் சென்று வந்தனர். அப்பொழுது இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு காதலாக மாறியது. இந்திரஜா கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். அவரது சீனியரான சைதன்யா கல்லூரி படிப்பை முடித்து கடந்த 6 மாதங்களாக ஹைதராபாதில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இருவரும் போனில் தொடர்புகொண்டு பேசி பழகி வந்தனர். அவுலையாவிற்கு இந்தத் தகவல் தெரிந்ததால் தனது மகளை எச்சரித்துள்ளார். தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்த சைதன்யாவை காதலிப்பதை விட்டுவிட வேண்டும் எனவும், தான் பார்க்கும் மாப்பிள்ளையை திருமணம் செய்துகொள்ள வேண்டுமெனவும் அவர் இந்திரஜாவை வற்புறுத்தி வந்தார்.
இந்திரஜா சைதன்யாவையே திருமணம் செய்து கொள்வேன் என கூறி வந்த நிலையில் தந்தைக்கும் மகளுக்கும் இடையே தொடர்ந்து வாக்குவாதமும் சண்டையும் ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று இரவு இந்திரஜாவை வீட்டிலேயே தூக்கிட்டு கொலை செய்த அவுலையா, இன்று அதிகாலை கிராமத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் இந்திரஜாவின் உடலை எரித்துள்ளார்.
கிராம மக்கள் சிலர் கொலை சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். கொம்மரோலு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவுலையாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவுலையாவின் உறவினர்கள் சம்பவம் குறித்து பேசும்போது, கடந்த சில நாட்களாக இந்திரஜா உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், இதனால் அவர் உயிரிழந்துவிட்டதாகவும் கூறினர்.
கிராம மக்களோ, 'இது முற்றிலும் கொலையே எனவும், தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்த சைதன்யாவை இந்திரஜா காதலித்ததால் தந்தைக்கும் மகளுக்கும் இடையே தொடர்ந்து சண்டை ஏற்பட்டுவந்த நிலையில் கொலை நடந்துள்ளது’ என தெரிவித்தனர். அண்மைக் காலமாக ஆந்திராவில் ஆணவக் கொலைகள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Also watch
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.