அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தி கணக்கில் வராத பணம், முக்கிய ஆவணங்கள் ஆகியவற்றை கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளனர். இல்லாத ஹோட்டலுக்கு லட்சக்கணக்கில் பணம் செலுத்தியது உட்பட இரண்டு பணபரிவர்த்தனை தொடர்பான விசாரணை அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் மற்றும் அவரது குடும்பத்தாரை வழக்கில் சிக்கவைத்துள்ளது.
ஆட்சி மாற்றத்திற்குப்பின், முன்னாள் அமைச்சர்களாகிப்போன எம்.ஆர் விஜயபாஸ்கர், எஸ்.பி வேலுமணி, கேசி வீரமணி என 6 பேருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்து சோதனை மேற்கொண்டது. ஆனால் இன்னும் ஒருவர் மீது கூட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை.
இந்த நிலையில் நடவடிக்கைக்கு ஆளான முன்னாள் அமைச்சர்களின் பட்டியலில் புதிதாக சேர்ந்துள்ளார் காமராஜ். அமைச்சராக இருந்த காலகட்டத்தில் காமராஜ் சுமார் 2028 கோடி ரூபாய் ஊழல் செய்தாக லஞ்ச ஒழிப்புத் துறையில் அறப்போர் இயக்கம் புகார் அளித்து இருந்தது. அதிகாரிகளுடன் கூட்டுசேர்ந்து பருப்பு, சர்க்கரை, பாமாயில் ஆகியவை கொள்முதல் செய்வதில் முறைகேடு செய்து, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் அளிக்கப்பட்டது
ஆவணங்களை ஆய்வு செய்த போலீசார், காமராஜ் மற்றும் அவரது மகன்கள் இனியன், இன்பன் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சராக இருந்த 8 ஆண்டுகளில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.58.44 கோடி சொத்து சேர்த்ததாக காமராஜ் மீது லஞ்ச ஒழிப்புத்துறை குற்றம்சாட்டியுள்ளது. அரசு பதவியை தவறாக பயன்படுத்தி, பல்வேறு ஊழல் நடவடிக்கையில் ஈடுபட்டு சுயலாப நோக்கில் வருமானத்திற்கு அதிகமாக அசையும் மற்றும் அசையா சொத்துக்களை குவித்துள்ளார் என்கிறது காவல்துறை. இதையடுத்து சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் 49 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
இதையும் படிங்க: அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ்க்கு சொந்தமான இடங்களில் இருந்து ரூ.41.06 லட்சம் பறிமுதல்: லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை
மருத்துவம் படித்துள்ள காமராஜின் மூத்த மகன் இனியன் வாசுதேவபெருமாள் ஹெல்த் கேர் நிறுவனத்தின் மேலாண் இயக்குநராக உள்ளார். காமராஜின் இளையமகன் இன்பனும் மருத்துவம் படித்துள்ளார். இவரும் வாசுதேவபெருமாள் ஹெல்த் கேர் நிறுவனத்தின் மேலாண் இயக்குநராக உள்ளார். குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்களில் காமராஜ், சந்திரசேகரன், கிருஷ்ணமூர்த்தி ஆகிய மூவரும் வகுப்பு தோழர்கள். உதயகுமார் வக்கீலாக பணியாற்றிவருகிறார்.
கே.ஆர். அண்ணாமலை செட்டியார் என்பவருக்கு சொந்தமான என்.ஏ.ஆர்.சி ஹோட்டல் நிறுவனத்தை ரூ.27 கோடிக்கு காமராஜின் நண்பர்கள் சந்திரசேகரன், கிருஷ்ணமூர்த்தி, உதயகுமார் 2016 ஆண்டு வாங்கியுள்ளதாக ஆவணங்கள் உள்ளது. இந்த ஹோட்டல் நிறுவனம் பதிவு செய்யப்பட்டதாக சொல்லப்பட்ட தஞ்சை மேலவீதி முகவரிக்குச் சென்று பார்த்த போது அங்கு அப்படியொரு நிறுவனமே செயல்படவில்லை என்பது தெரியவந்தது. அதேபோல், காமராஜின் நண்பர்களான சந்திரசேகரன், கிருஷ்ணமூர்த்தி, உதயகுமார் ஆகியோரது வருமானவரித்துறை தாக்கல் கணக்கை வைத்து பார்த்தால் இவ்வளவு பெரிய தொகை கொடுத்து வாங்கியதாக நம்பமுடியவில்லை என அதிகாரிகள் கூறுகின்றனர்.
மேலும் படிக்க: அதிமுக பொதுக்குழு.. திங்கள்கிழமை காலை 9 மணிக்கு தீர்ப்பு..
விரிவான விசாரணையில், அமைச்சராக இருந்த காமராஜ் கொடுத்த பணத்தில் என்.ஏ.ஆர்.சி ஹோட்டல் நிறுவனத்தை ரூ.27 கோடிக்கு அவரது நண்பர்கள் வாங்கியுள்ளனர் என்கிறார்கள் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள். அதேபோல், தஞ்சை தெற்குத்தோட்டம் வி.பி கார்டன் பகுதியில் 47 ஆயிரம் சதுர அடியில் அவரது மகன்களின் பெயரில் மருத்துவமனை கட்டுவதாக செலவிடப்பட்டதாக சொல்லப்பட்ட தொகையும் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இரண்டு பரிவர்த்தனைகளை ஆய்வு செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இல்லாத சொத்துக்கள் இருப்பது போல் செலவு செய்து கறுப்பு பணத்தை வெள்ளையாக்கும் முயற்சி நடந்துள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர். ரகசியமாக கோடிக்கணக்கில் சொத்து சேர்த்துவிட்டு, அவற்றை காமராஜ் மறைத்துள்ளார் என்று குற்றஞ்சாட்டியுள்ள அறப்போர் இயக்கத்தின் ஜெயராம், காமராஜ் அமைச்சராக இருந்தபோது நடந்த உணவு பொருட்கள் கொள்முதலில் மிக பெரியளவு முறைகேடு நடந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதை படிக்க: கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை அறிக்கை
இந்நிலையில் தன்மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ள காமராஜ் இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று விளக்கம் கொடுத்துள்ளார். காலையில் தொடங்கிய சோதனையை இரவு முடிந்த நிலையில் சோதனை நடந்த இடத்தில் நாற்பத்தி ஒரு லட்சம் ரொக்கமும்,அதில் கணகில் வராத பதினைந்து லட்சத்து ஐம்பதாயிரம் ரொக்கத்தை கைபற்றியதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: ADMK, Anti-corruption bureau, Directorate of Vigilance and Anti-Corruption, Kamaraj