CAA-க்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் - போராட்டக்காரர்கள் கோரிக்கை

கோப்புப் படம்

  • News18
  • Last Updated :
  • Share this:
    குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் இரவு பகலாக மூன்றாம் நாளாக போராட்டம் தொடர்கிறது. மேலும், போலீசாரின் தடியடியைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது.

    குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் கடந்த வெள்ளிக்கிழமை, பிற்பகலில் ஏராளமான இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் இரவிலும் தொடர்ந்த நிலையில், கூட்டம் கலைந்து செல்ல மறுத்ததால் போலீசார் தடியடி நடத்தினர். இதில், போராட்டக்காரர்கள் 5 பேரும், மேற்கு மண்டல காவல் இணை ஆணையர் விஜயகுமாரி உள்பட காவலர்கள் நான்கு பேரும் காயமடைந்தனர்.

    போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டவர்களிடம் சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் பேச்சு வார்த்தை நடத்தினார். அவரது சமாதானத்தை ஏற்காமல் மூன்றாவது நாளாக போராட்டத்தைத் தொடர்கின்றனர். தமிழக சட்டப் பேரவையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் எனவும் அவர்கள் தெரிவித்துளளனர்.

    சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது. கோவையில் இஸ்லாமியர்கள் கூடி மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். சென்னையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்த உத்திரவிட்ட காவல் துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு வண்ணாரப்பேட்டை தாக்குதலுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.

    இதனிடையே, திருச்சி மாவட்டம், மணப்பாறையில் இந்திய இறையாண்மையைக் காப்போம் என்ற முழக்கத்துடன், பேரணி நடைபெற்றது. அப்போது, குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் முழக்கமிட்டனர்.

    பின்னர், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசியத் தலைவர் காதர் மொய்தீன் தமைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய அவர், தேசிய குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறுவதுடன், தேசிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, தேசிய மக்கள் தொகை பதிவேட்டை கொண்டுவர மாட்டோம் என மத்திய அரசு உறுதியளிக்கும் வரை போராட்டம் தொடரும் என்றார். இதையடுத்து பேசிய திமுக எம்.பி., திருச்சி சிவா, இந்தப் போராட்டத்துக்கு அதிமுகதான் காரணம் என குற்றம் சாட்டினார்.

    Also see:
    Published by:Rizwan
    First published: