எம்.எல்.ஏ., மகன் காரில் ரூ.1 கோடி பறிமுதல் விவகாரத்தில் அடுத்தடுத்து பகீர் திருப்பங்கள்...!

Youtube Video

பணத்தைக் காரில் கொண்டு வந்த பிரச்னையில் இருந்து தப்பிக்க காரில் இருந்தவர்கள் தங்களுக்கும் பணத்திற்கும் தொடர்பில்லை என்று கூறியுள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

 • News18
 • Last Updated :
 • Share this:
  திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலையில் முசிறி எம்எல்ஏ மகன் காரில் ஒரு கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் மீண்டும் ஒரு திருப்பம் ஏற்பட்டுள்ளது. காரில் 3 கோடி ரூபாயுடன் சென்ற அதிமுகவினரிடம் 2 கோடி ரூபாயை ஒரு கும்பல் கொள்ளையடித்துள்ளது அம்பலமாகியுள்ளது.

  மார்ச் 23ம் தேதி இரவு திருச்சி - கரூர் சாலை பெட்டவாய்த்தலை பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அந்த வழியாக வந்த வெள்ளை நிற இனோவா காரை நிறுத்தி சோதனையிட முயன்றனர்.

  அப்போது காரில் இருந்தவர்கள், ஒரு மூட்டையை வெளியே வீச முயன்றதாகவும் அதிகாரிகள் அதை சோதனையிட்டபோது அதில், 500 ரூபாய் கட்டுகளாக ஒரு கோடி ரூபாய் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

  காரில், முசிறியைச் சேர்ந்த, அதிமுக பிரமுகர்கள் 55 வயதான ரவிச்சந்திரன், 11-வது கிளைச் செயலாளர் 43 வயதான சத்தியராஜா, எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் 46 வயதான ஜெயசீலன், ஓட்டுநர் 36 வயதான சிவகுமார் ஆகியோர் இருந்தனர்

  அந்தக் கார், முசிறி தொகுதி அதிமுக வேட்பாளர் செல்வராஜின் மகன் ராமமூர்த்திக்கு சொந்தமானது எனத் தெரியவந்தது. நான்கு பேரும் பணத்திற்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்று கூறியதால் அவர்களிடம் போலீசாரும் துணை ஆட்சியரும் எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பி விட்டனர்.

  ஒரு கோடி ரூபாய் ரொக்கம், மாவட்ட கருவூலத்திற்கு அனுப்பப்பட்டது. இந்த சம்பவத்தை உயரதிகாரிகளுக்கு முறையாக தெரிவிக்கவில்லை எனக் கூறி, மாவட்ட ஆட்சியராக இருந்த சிவராசு, காவல் கண்காணிப்பாளர் ராஜன், ஸ்ரீரங்கம் துணை ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா ஆகியோரை பணியிட மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் மார்ச் 25-ம் தேதி உத்தரவிட்டது.

  இந்நிலையில், காரிலிருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக துணை ஆட்சியர் அளித்த அறிக்கையை, ஆட்சியரும், எஸ்.பி.யும் மாற்றி, புதரிலிருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக குறிப்பிட்டதாக தேர்தல் ஆணையம் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

  இதேபோல, போலீஸாரின் அறிக்கையிலும் புதரிலிருந்தே பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. புதிய ஆட்சியராக திவ்யதர்ஷினி, காவல் கண்காணிப்பாளராக மயில்வாகனன் நியமிக்கப்பட்டனர்.

  அதன்பின், மயில்வாகனன் மேற்பார்வையிலான தனிப்படை போலீசார், பணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்; அதில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின. சம்பவத்தன்று முசிறி அதிமுக எம்எல்ஏ செல்வராஜின் மகன் ராமமூர்த்தி காரில் பல கோடி ரூபாய் ரொக்கப் பணம் கொண்டு செல்லப்பட்டதாக போலீசார் கூறுகின்றனர்.

  Also read... கரூரில் நள்ளிரவில் திமுக - அதிமுகவினர் மோதல் : 10 க்கும் மேற்பட்டோர் காயம்

  இந்தத் தகவல் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒரு ரவுடிக் கும்பலுக்குத் தெரியவந்ததை அடுத்து அவர்கள் வழியில் காரை மறித்து, பணத்தைக் கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளனர். கொள்ளைக் கும்பல் தப்பிய நிலையில் காரில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து நின்று கொண்டிருந்த போதுதான் பறக்கும் படையினர் அந்த இடத்திற்கு வந்து விசாரணை நடத்தியுள்ளனர்.

  பணத்தைக் காரில் கொண்டு வந்த பிரச்னையில் இருந்து தப்பிக்க காரில் இருந்தவர்கள் தங்களுக்கும் பணத்திற்கும் தொடர்பில்லை என்று கூறியுள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

  இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட, ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்த திலீப் குமார், சுரேஷ், ராஜ்குமார், சிவா, மணிகண்டன் மற்றும் பிரகாஷ் ஆகிய 6 பேரைப் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Vinothini Aandisamy
  First published: