பாஜகவும், அதிமுகவும் ஒன்றில்லை. இதில் ஒரு குழப்பமும் இல்லை. சில காரணங்களுக்காக நாங்கள் ஒன்றாக பயணிக்கிறோம் என நியூஸ் 18 தளத்துக்கு பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை நியூஸ்18 தளத்திற்கு பிரத்யேக பேட்டியளித்தார். அந்த பேட்டியில் ஊடகத்தினரிடம் கோபமாக நடந்துகொண்டது, காயத்ரி ரகுராம் கட்சியை விட்டு விலகியது போன்ற பல கேள்விகளுக்கு பதிலளித்தார். ஊடகத்தினருக்கு கோபமாக பதிலளித்தது குறித்து பேசிய அண்ணாமலை, ''இங்கே சில உள்ளூர் ஊடகங்கள் பாஜக மீது கடினமாக நடந்துகொள்கின்றன. ஒரு தலைபட்சமாக விவாத நிகழ்ச்சிகளை நடத்துகின்றன. இத்தகைய ஊடகங்கள் கடந்த 2019 ஆம் ஆண்டு கோ பேக் மோடி பிரச்சாரத்தில் முக்கிய பங்கு வகித்தனர்.
இதன் காரணமாக இத்தகைய ஊடகங்கள் நடத்தும் விவாதங்களில் கலந்துகொள்வதில்லை என முடிவெடுத்தோம். உதாரணமாக திமுகவிற்கு என சொந்தமாக கலைஞர் டிவி இருக்கிறது. சன் டிவி போன்ற திராவிட கொள்கைகளைப் பரப்ப தனி தொலைக்காட்சிகள் இருக்கின்றன. மற்றொரு பக்கம் தொழிலதிபர்கள் வைத்திருக்கும் தொலைக்காட்சிகள் திமுகவிற்கு எதிராக எந்த முடிவும் எடுப்பதில்லை. காரணம் அவர்களுக்கு தங்கள் தொழிலை இழக்க நேரிடும் என்ற பயம் இருக்கிறது. என்னால் சிரித்துக்கொண்டு ஊடகங்களுக்கு பதிலளிக்க முடியும். ஆனால் பாஜகவைப் பற்றி மக்கள் நன்கு அறிந்துகொள்வார்கள் என்பதற்காகத்தான் வேண்டுமென்றே அப்படி நடந்துகொள்கிறேன்.
சரியான ஆதாரங்களுடன் திமுக ஆதரவு ஊடகங்களுக்கு எதிராக பேசுகறேன். இங்கே நல்ல மற்றும் மோசமான ஊடகங்கள் இருக்கின்றன. நான் சில மோசமான ஊடகங்களிடம் தான் முரட்டுத்தனமாக நடந்துகொள்கிறேன் என்றார்.
மேலும் அடுத்த ஆண்டு நாங்கள் ஊழலுக்கு எதிராக இயக்கம் ஒன்றை துவங்கவிருக்கிறோம். அந்த வழியை அடைய நீண்ட காலம் ஆகலாம். ஆனாலும் நாங்கள் களமிறங்கவிருக்கிறோம். விரைவில் நாங்கள் இணையதளம் மற்றும் செயலி ஒன்றை அறிமுகப்படுத்தவிருக்கிறோம். அதில் ஊழல் குறித்து புகாரளிக்கலாம். அதனை வைத்து எங்களால் நடவடிக்கை எடுக்க முடியும். மக்கள் அரசியல்வாதிகளின் பினாமி சொத்துக்களை போட்டோவாகவோ, வீடியோவாகவோ எடுத்து எங்களுக்கு அனுப்பலாம். பாஜக ஒரு கட்சிதான் ஊழலுக்கு எதிராக செயல்படுகிறது. தமிழக மக்களும் இதனை நன்கு அறிவார்கள்.
திமுக, அதிமுக என பலம் வாய்ந்த இரண்டு திராவிட கட்சிகளுக்கு இடையே தடம் பதிக்க பாஜக முயல்வது குறித்து பேசிய அண்ணாமலை, எங்களுடைய உடனடி திட்டம் என்னவென்றால். மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைப்பதை உறுதி செய்வது. எல்லாவற்றிற்கும் மேலாக நாங்கள் மாநில கட்சிகளுடன் பயணித்துக்கொண்டிருக்கறோம். எங்கள் இடத்துக்காக நாங்கள் முயற்சி செய்துகொண்டிருக்கிறோம். தேர்தலில் பல முறை வென்ற சட்டமன்ற உறுப்பினர் தான் சிறந்த தேர்வு என்ற மக்களின் எண்ணத்தை உடைக்க வேண்டும். புதியவர்கள் புத்துணர்வு அளிப்பார்கள் என்பதை மக்களுக்கு நாங்கள் காட்டவிருக்கிறோம். பாஜகவும், அதிமுகவும் ஒன்றில்லை. இதில் ஒரு குழப்பமும் இல்லை. சில காரணங்களுக்காக நாங்கள் ஒன்றாக பயணிக்கிறோம். நாங்கள் ஒரே மாதிரியான கட்சிகள் இல்லை. இந்த வித்தியாசத்தை மக்களும் நன்கு அறிவார்கள் என்றார்.
காயத்ரி ரகுராம் ஏற்படுத்திய சர்ச்சை குறித்து கேள்வி எழுப்பியபோது, ''கட்சியை விட்டு விலகியவர்களின் எதிர்காலத்துக்கு வாழ்த்துகள். அரசியலில் இருப்பவர்கள் பொறுமையாக இருக்க வேண்டும். பொறுமை மிக முக்கியமான ஒன்று. தங்கள் சொந்த நலனுக்காக கட்சியைப் பயன்படுத்தக் கூடாது. நான் எந்தப் பெயரையும் குறிப்பிடவிரும்பவில்லை. நான் கட்சியையும் அமைப்பையும் சுத்தப்படுத்தும் முயற்சியில் கண்டிப்பாக நடந்துகொள்வேன் என்றார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.