Home /News /tamil-nadu /

தப்பித் தவறிகூட ஆதீனத்தை தொட்டு விடாதீர்கள்... விளைவுகள் பயங்கரமாக இருக்கும் - அண்ணாமலை எச்சரிக்கை

தப்பித் தவறிகூட ஆதீனத்தை தொட்டு விடாதீர்கள்... விளைவுகள் பயங்கரமாக இருக்கும் - அண்ணாமலை எச்சரிக்கை

அண்ணாமலை

அண்ணாமலை

Trichy : 2024ல் கண்டிப்பாக பாஜக எம்.பி. தான் திருச்சியில் இருப்பார் என திருச்சியில் நடைபெற்ற சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார்.

திருச்சி புத்தூர் நால்ரோடு அருகே, மத்திய பாஜக அரசின், 8 ஆண்டுக்கால சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநிலப் பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமை வகித்தார். இதில், திருச்சி மாநகர் புறநகர், மற்றும் மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பாஜகவினர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசுகையில், “திருச்சி மாவட்டத்தில் உள்ள அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு, அவர் எந்தத் துறை அமைச்சர் என்று அவருக்கே தெரியவில்லை. அவரது நண்பர் உதயநிதி ஸ்டாலின் சூட்டிங் நிகழ்ச்சி நடக்கும்போது லைட்டு பாயாக அமைச்சர் சென்று அமர்ந்திருப்பார்.

பின்னர் கிடைக்கும் கொஞ்ச நேரத்தில் பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்குவார். மாணவர்கள் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு அன்பில் மகேஷ் பொய்யாமொழி பார்த்து கற்றுக் கொள்வார்கள். ஆனால், எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு பிரதமர் நரேந்திர மோடியை பார்த்து மாணவர்கள் கற்றுக் கொள்வார்கள்.

ஆதீனத்தை மிரட்டினால்..

தற்போது புது காஸ்டியூம் போட்டுள்ளார் அமைச்சர் சேகர் பாபு. மீண்டும் காவி வேட்டி கட்டத் துவங்கியுள்ளார். மதுரை ஆதீனத்தை அமைச்சர் சேகர்பாபு தொடர்ந்து மிரட்டி வருகிறார். பழைய சேகர்பாபுவாக மாறுவதை பார்ப்பதற்குத்தான் மோடி அரசு காத்துக் கொண்டு இருக்கிறது. ஆதீனத்தின் மேல் மட்டும் நீங்கள் கையை வைத்து பாருங்கள்.

ஆதீனத்தை மிரட்டும் வேலையை நிறுத்தி விடுங்கள். மதுரையில் துறவிகள் மாநாடு நடந்து முடிந்து இருக்கிறது. ஆதீனங்களை நேரில் வர சொல்லி முதல்வரை சந்திக்க வைக்கின்றனர். ஆதீனத்தை மிரட்ட ஆரம்பித்து விட்டனர். இதுதான் இவர்களுடைய அழிவுக்கு காரணமாக இருக்கும்.

வடபழனி முருகன் கோயிலுக்கு சொந்தமான 5.5 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டதாக கூறுகின்றனர். கடந்த, 2007ல் இந்த இடத்தை குத்தகைக்கு விட்டவர்களே நீங்கள்தான். தப்பித் தவறிகூட ஆதீனத்தை தொட்டு விடாதீர்கள். அதன் விளைவுகள் மிக பயங்கரமாக இருக்கும்.

கோபாலபுரத்தில் உள்ள பாதிப்பேர் சிறைக்கு செல்ல வேண்டும்

திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், எம்.பி.க்கள் மற்றும் நிர்வாகிகள், 10 தனியார் மருத்துவ கல்லூரிகளை நடத்தி வருகின்றனர். 2006ம் ஆண்டு முதல், 2011ம் ஆண்டு வரை, ஜூடுசியல் என்கொயரி ( judicial enquiry) போட்டால் இன்று கோபாலபுரத்தில் உள்ள பாதிப்பேர் சிறைக்கு செல்ல வேண்டும்.

ஹிந்தி கண்டிப்பாக திணிக்க படாது.  எனக்கு ஹிந்தி தெரியாது, டெல்லி வந்து தான் ஹிந்தியை கற்றுக்கொண்டேன் என்று பிரதமர் கூறியுள்ளார். அமைச்சர் பொன்முடி ஆப்ஷனாக ஹிந்திமொழி உள்ளது என கூறுகிறார். புதிய கல்விக் கொள்கையில் என்ன உள்ளதோ அதை அப்படியே கையில் எடுத்துக் கொண்டு, தமிழகத்தின் கல்விக் கொள்கை என்று கூறுவதற்கு, தமிழகத்தில் உள்ள அமைச்சர்கள் வெட்கப்பட வேண்டும்.

அனைத்து இடத்திலும் ஊழல் செய்யும் ஒரு கட்சியாக திராவிட முன்னேற்றக் கழகம் வளர்ந்துள்ளது. எல்லா துறைகளிலும் தனது குடும்பத்தை சார்ந்தவர்கள் இருக்க வேண்டுமென்று திட்டமிட்டுள்ளது. கடந்த, 1974ம் ஆண்டு கலைஞர் இரண்டு தவறுகளை செய்கிறார். 356வது பிரிவை பயன்படுத்த வேண்டும் என்பதற்காக முதலில், ஹேமாவதியில் ஐந்து அணைகள் கட்ட காரணமாக இருந்தார். இரண்டாவது, கச்சத் தீவை தூக்கி கொடுத்தார்.

மேகதாதுவை பற்றி பேசுவதற்கு நம் முதலமைச்சருக்கு எந்தவித முகாந்திரமும் கிடையாது. வெட்கமும், மானமும் இல்லாமல் தமிழகத்தில் உள்ள ஒரே கட்சி காங்கிரஸ் கட்சிதான். இவர்கள் ஓரமாக இருந்து வேடிக்கை பார்த்தாலே போதும் கச்சத்தீவை பாஜக மீட்கும். 18 கோடி தொண்டர் பாரதிய ஜனதா கட்சியில் உள்ளார்கள். உலகத்திலேயே மிகப்பெரிய ஜனநாயக கட்சி நாங்கள்தான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அறத்தின் வழியில் செல்ல வேண்டும் என்று நினைக்கிறோம். நீங்கள் சில்லு வண்டுகளை எல்லாம் தொண்டன் என்று அழைத்து வராதீர்கள். நீங்கள் செய்யும் ஒவ்வொரு ஊழல்களையும் மக்கள் மன்றத்தில் நாங்கள் தொடர்ந்து வைக்கப் போகிறோம்.

5 அமைச்சர்கள்

வரும், 2024ல் கண்டிப்பாக பாஜக எம்.பி. தான் திருச்சியில் இருப்பார். காவல்துறை கையில் கட்டப்பட்டுள்ள கட்டை அவிழ்த்து அவர்கள் கம்பீரமாக வர வழிவகை செய்வோம். 2024ல் நாம் டெல்லியில் வெற்றிப் பெறப் போகிறோமா என்பது கேள்வி கிடையாது. 400 சீட்டு வாங்கப் போகிறோமா? அல்லது, 450 சீட்டுகள் வாங்கப் போகிறோமா என்பது தான் கேள்வி.

Must Read : மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசு சூழ்ச்சி: துரைமுருகன்

தமிழகத்தில், 25 இடங்களில் பாஜக வெற்றிப் பெற வேண்டும். குறிப்பாக, 5 எம்.பி.க்கள் தமிழகத்திலிருந்து கேபினெட்டுக்கு (அமைச்சர்களாக) செல்லவேண்டும்” இவ்வாறு கூறினார்.
Published by:Suresh V
First published:

Tags: Annamalai, BJP, Trichy

அடுத்த செய்தி