அ.தி.மு.க, பா.ஜ.க இடையிலான உறவில் எந்தவித குழப்பமும் இல்லை. அ.தி.மு.கவை சேர்ந்த சில இரண்டாம் கட்டத் தலைவர்கள் சொல்லக்கூடிய கருத்துக்கள் அவருடைய சொந்த கருத்துக்கள். அதுபற்றி
பாஜக கவலைப்படாது என பா.ஜ.க தமிழக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற உள்ள பாஜக நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தூத்துக்குடி விமான நிலையம் வந்தார் அண்ணாமலை. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, ‘கர்ப்பிணிகளுக்கு ஹெல்த் மிக்ஸ் என்ற பெயரில் ஊட்டச்சத்து பொருட்கள் வழங்குவதில் அரசுக்கு 77 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அந்த பொருட்களை கொள்முதல் செய்ய ஆவின் நிறுவனத்திற்கு டெண்டர் வழங்காமல் தனியார் நிறுவனத்திற்கு டெண்டர் வழங்க முயற்சி செய்துள்ளனர்.
இதற்காக 450 கோடி ரூபாய்க்கு தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்க அந்த நிறுவனத்திடம் இருந்து 100 கோடி ரூபாய் லஞ்சம் பெறப்பட்டுள்ளது என்று அவர் குற்றம் சாட்டினார். தமிழக அரசு பொங்கல் தொகுப்பு வழங்கியதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்ற நிலையில் இந்த பொங்கல் பொருட்களை சரியாக வழங்காத நிறுவனங்கள் வரும் காலங்களில் எந்த ஒப்பந்தங்களிலும் கலந்து கொள்ளக் கூடாது என தமிழக முதலமைச்சர் அவற்றை கருப்பு பட்டியலில் வைத்துள்ள நிலையில் அனிதா டெக்ஸ் கார்டு என்ற நிறுவனம் மீண்டும் தற்போது இந்த ஒப்பந்தத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது ஏன் என அவர் கேள்வி எழுப்பினார்.
ஊட்டச்சத்து பொருட்கள் ஆவின் நிறுவனத்திடமிருந்து வாங்குவதற்கு ஏன் அனுமதி கொடுக்கவில்லை என்ற அவர், இதற்கான ஒப்பந்தங்கள் இன்னும் இரண்டு தினங்களில் திறக்கப்பட உள்ளது. அப்போது குறைந்த விலை பட்டியல் கொடுத்த இரண்டு நிறுவனத்தின் விபரத்தை தமிழக அரசு வெளிப்படையாக வெளியிட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
முகமது நபிகள் குறித்து சர்ச்சை கருத்து - பாஜக செய்தித் தொடர்பாளர்கள் கட்சியிலிருந்து நீக்கம்
பாரதிய ஜனதா கட்சி பற்றி அ.தி.மு.கவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் கூறிய கருத்து அவருடைய தனிப்பட்ட கருத்து. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுடைய கருத்துக்களே அதிகாரப்பூர்வமாக கருத்து. எனவே இரண்டாம் கட்டத் தலைவர்கள் கருத்துக்களுக்கு யாரும் பதில் அளிக்க வேண்டாம் என்று அவர் கூறினார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.