மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க, அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை கால அவகாசம் கொடுக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழக அரசின் மானியம் பெற மின்சார இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டுமென அவசர கதியாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. ஏற்கனவே இரண்டு மாதங்களுக்கு முன்புதான் மின்சாரக் கட்டணத்தை 50 சதவீதம் வரை உயர்த்தி, பொதுமக்களை வஞ்சித்த திறனற்ற திமுக அரசு, மீண்டும் ஆதார் இணைப்பிற்குப் போதுமான அவகாசம் கொடுக்காமல் பொதுமக்களை இன்னலுக்குள்ளாக்கியிருக்கிறது.
இதையும் படிக்க : ஆளைக் கொல்லும் ஆன்லைன் சூதாட்டம்... நிரந்தர தடை வருமா? - ஆளுநர் முடிவுக்காக காத்திருக்கும் தமிழகம்!
என்ன காரணத்திற்காக மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்ற விளக்கம் சொல்லாமல், ஆதார் எண்ணை இணைக்காவிட்டால், மின் கட்டணம் செலுத்த முடியாது என்று அறிவித்த திமுக அரசு, பொது மக்களின் கடும் எதிர்ப்புக்குப் பிறகு சற்று பின்வாங்கி, டிசம்பர் 31 வரை ஆதார் எண்ணை இணைக்காவிட்டாலும் மின்சாரக் கட்டணம் செலுத்தலாம் என கண்துடைப்பிற்காக அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. ஆனால் உண்மையான காரணம்….. மக்களின் கவனத்தை திசை திருப்ப…
தமிழகத்தில் உள்ள மின் பயனாளிகளுக்கு, சத்தம் இல்லாமல் ஒரு புதிய கட்டணத்தை தமிழ்நாடு மின்சார வாரியம் உயர்த்தியுள்ளது. அதாவது அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துக் கொண்டிருக்கும் மக்கள் இனி அவர்களின் கட்டிடத்திற்கு உள்ளேயே இருக்கும் மாடிப்படி, நடைபாதை, வராண்டா, புல்வெளிகள், பொது இடங்கள் ஆகிய பகுதிகளுக்கு, விதிக்கப்படும் கட்டணம் 1500% அதிகரித்துள்ளது. அதாவது குடியிருப்பில் இருந்தாலும், தொழிற்சாலைக்கான கட்டணம் போல, யூனிட் ஒன்றுக்கு எட்டு ரூபாய் அளவில் புதிய கட்டணம் விதிக்கப்படுகிறது.
பொது பயன்பாட்டுக் கட்டணம் என்ற பெயரில், இந்தியாவிலேயே மிக அதிகமான கட்டணத்தை வசூலிக்கும், தமிழக அரசு அதை மறைப்பதற்காக, ஆதார் அட்டை என்ற புதிய சர்ச்சையை அவரவசரமாக ஆரங்கேற்றுகிறது. மக்களின் கவனத்தை திசை திருப்ப திறனற்ற திமுக அரசு நாடகமாடுகிறது.
இதையும் படிக்க : ஆம் ஆத்மி பொதுக்கூட்டத்தில் சிறுமிக்கு காயம் - பாஜக மீது குற்றச்சாட்டு
நஷ்டத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் தமிழக மின்சார வாரியத்தைக் காப்பாற்ற புதியதாக எதுவும் திட்டங்கள் தீட்டாமல், தற்போது மானியமாக வழங்கிக் கொண்டிருக்கும் 100 யூனிட் மின்சாரத்தை நிறுத்தப் போகிறார்களோ என்ற அச்சத்தைப் பொதுமக்கள் மத்தியில் விதைத்திருக்கிறது இந்த அவசர அறிவிப்பு.
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட வலைத்தளமும் கடந்த சில நாட்களாக முடங்கிக் கிடக்கிறது. அதற்காக மின்சார வாரிய அலுவலகங்களில் ஏற்படுத்தப்பட்ட சிறப்பு வரிசைகளும் மூடப்பட்டிருக்கின்றன.
மத்திய அரசின் மானியத் தொகை பயனாளிகளுக்கு நேரடியாக அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்துவதற்கு ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்க, மத்திய அரசு ஒரு ஆண்டுக்கும் மேல் அவகாசம் கொடுத்திருந்தது.
ஆனால் அப்படி எந்தக் கால அவகாசமும் கொடுக்காமல் காரணமும் சொல்லாமல், திடீரென மின்சார இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது திமுக அரசு. அது மட்டுமல்லாது இதற்கும் மத்திய அரசின் மேல் பழியை போடுகிறார்கள் தமிழக மின்சார வாரியத்தில் உள்ள சில உயர் அதிகாரிகள்.
மத்திய அரசின் Revamped Power Distribution Schemeல் மின் நுகர்வோருக்கு வழங்கப்படும் சப்சிடி தொகை வங்கி கணக்கு மூலமாக செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்கள். 7 நாட்களில் ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்க வேண்டும் என்று குறிப்பிடவில்லை.
எனவே, திமுக அரசு, மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க, அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை கால அவகாசம் கொடுக்க வேண்டும் எனவும் அது வரை மின் கட்டணம் செலுத்துவதிலோ மின்சார இணைப்பிலோ எந்தச் சிக்கலும் உருவாக்கி, பொதுமக்களை வஞ்சிக்கக் கூடாது எனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Aadhar, Annamalai, Electricity, Electricity bill, TANGEDCO