மதுரையில் நிதியமைச்சர் பி.டி.ஆர். காரின் மீது காலணி வீசப்பட்ட சம்பவத்திற்கு, பாஜக தமிழக தலைவர் அண்ணாமலையே காரணம் என திமுகவினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இதுதொடர்பாக அண்ணாமலை பேசியதாக கூறப்படும் ஆடியோ பதிவு வைரலாகி வரும் நிலையில், அந்த ஆடியோ போலியானது என பாஜக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
தீவிரவாத தாக்குதலில் வீர மரணம் அடைந்த மதுரை ராணுவ வீரர் லட்சுமணனின் உடல் கடந்த 13-ம்தேதி மதுரைக்கு கொண்டு வரப்பட்டது. லட்சுமணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் நிதி அமைச்சருக்கும் பாஜகவினருக்கும் இடையே சலசலப்பு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த போது அவரது காரை முற்றுகையிட்ட பாஜகவினர் அவரது காரில் காலணியை வீசிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து மதுரை மாநகர் மாவட்ட தலைவராக இருந்த டாக்டர் சரவணன் கட்சியிலிருந்து விலகினார்.
பிடிஆர் மீது காலணி வீசி, அசம்பாவிதம் நடக்க சதி செய்ததாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது திமுகவினர் குற்றம் சாட்டி வந்தனர்.
அமைச்சர் பிடிஆர் கார் மீது காலணி வீசிய சம்பவம்.. டாக்டர் சரவணனை கைது செய்ய பாஜக புகார் மனு
இந்நிலையில், காலணி வீசப்பட்ட விவகாரம் தொடர்பாக பாஜக மதுரை மாவட்ட தலைவர் மகா சுசீந்திரனுடன், மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாக சமூகவலைதளங்களில் ஆடியோ வெளியாகி பரபப்பை ஏற்படுத்தியது. இது அண்ணாமலையின் குரல் போல் இருந்ததால், அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுகவினர் வலியுறுத்தி வருகின்றனர்.
சமூகவலைதளங்களில் அண்ணாமலை பேசியதாக பரவும் ஆடியோ போலி என்று தமிழக பாஜக விளக்கம் அளித்துள்ளது. விஷமிகள் சிலர் அண்ணாமலை பேசியதாக ஒரு ஆடியோவை எடிட் செய்து வெளியிட்டுள்ளனர் என்று பாஜக தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து நியூஸ் 18-க்கு பாஜக மதுரை மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது-
ஆடியோவில் இருப்பது என் குரல் அல்ல. நான் அதுபோன்று பேசவில்லை. நான் பேசாத ஒன்று பரவிக் கொண்டிருக்கிறது. என் குரலை சோதித்து பாருங்கள். அது என் குரலே அல்ல.
அது யார் குரல் என்பதை இனிமேல்தான் ஐ.டி. விங்கில் கொடுத்து செக் பண்ண வேண்டும். இந்த ஆடியோ கிராஃபிக்சாகத்தான் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அண்ணாமலை ஆடியோ விவகாரம் - பாஜக சார்பில் புகார் மனு
இந்நிலையில் ஆடியோவை மிமிக்ரி செய்து வெளியிட்டு தனக்கும், அண்ணாமலைக்கும் அவப்பெயர் ஏற்படுத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் அலுவலகத்தில் பாஜக மாவட்ட தலைவர் சுசீந்திரன் புகார் மனு அளித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.