தமிழக பா.ஜ.கவின் தலைவராக அண்ணாமலை நியமனம்

அண்ணாமலை

தமிழக பா.ஜ.கவின் புதிய தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார்.

  • Share this:
    தமிழக பா.ஜ.கவின் தலைவராக இருந்த தமிழிசை சௌந்தர்ராஜன், 2019-ம் ஆண்டில் தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். அதனையடுத்து, ஓரிரு மாதங்கள் கழித்து பா.ஜ.க தலைவராக எல்.முருகன் நியமிக்கப்பட்டார். பா.ஜ.க தலைவராக எல்.முருகன் நியமிக்கப்பட்டதிலிருந்து அவர், தமிழகத்தில் பா.ஜ.க வளர்த்தெடுக்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டார். தமிழ்க் கடவுள் முருகன் குறித்து கருப்பர் கூட்டம் இழிவாக பேசியதாக விமர்சனம் எழுந்தது.

    இதுதொடர்பாக வீடியோ பதிவிட்ட நபர் கைது செய்யப்பட்ட நிலையிலும், அந்த விவகாரத்தை தொடர்ந்து பிரச்னையாக எழுப்பினார் எல்.முருகன். கடவுள் முருகனை அவதூறாக பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் வேல் யாத்திரை அறிவித்தார். அ.தி.மு.க கூட்டணியில் இருந்தபோதும் ஆட்சிக்கு எதிராக வேல் யாத்திரை அறிவித்தார். தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைத்து பா.ஜ.க தேர்தலை எதிர்கொண்டது. அ.தி.மு.கவிடம் 20 தொகுதிகள் வாங்கி பா.ஜ.க போட்டியிட்டது. அதில், 4 தொகுதிகளில் பா.ஜ.க வெற்றி பெற்றது.

    இந்தநிலையில், பிரதமர் மோடி மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்தார். அதில், தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர், தற்போது மத்திய அமைச்சராக பதவியேற்றுள்ளார். பா.ஜ.க விதிமுறைகளின்படி மத்திய அமைச்சர், மாநில அமைச்சர் பதவிகளில் இருப்பவர்கள் கட்சித் தலைவர் பதவிகளில் இருக்கக் கூடாது. அதன்படி, பா.ஜ.க தலைவர் பதவியை அவர் ராஜினாமா செய்வார். அதனையடுத்து, தமிழக பா.ஜ.கவின் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழக பா.ஜ.கவில் 10 பேர் துணைத் தலைவர்களாக இருந்தனர். அதில், அண்ணாமலைதான் தலைவராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    இந்தநிலையில், அண்ணாமலையை மாநிலத் தலைவராக நியமித்து பா.ஜ.க தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக பா.ஜ.க தேசியச் செயலாளர் அருண் சிங் வெளியிட்ட அறிவிப்பில், ‘தமிழக பா.ஜ.கவின் தலைவராக முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலையை ஜே.பி.நட்டா நியமித்துள்ளார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த அண்ணாமலை கர்நாடகா மாநிலத்தில் ஐ.பி.எஸ் அதிகாரியாக பணியாற்றிவந்தார். 2019-ம் ஆண்டு ஐ.பி.எஸ் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்ற அண்ணாமலை, சமூக செயல்பாட்டில் ஈடுபட்டுவந்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அதனையடுத்து, ரஜினிகாந்த் கட்சித் தொடங்கினால் அதில் அவர் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவர் பா.ஜ.கவில் இணைந்தார். அதனையடுத்து, அவருக்கு 4 தினங்களில் பா.ஜ.க துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது. நடந்த முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் போட்டியிட்ட அண்ணாமலை தி.மு.க வேட்பாளரிடம் தோல்வியடைந்தார். இந்தநிலையில், அவர் பா.ஜ.கவில் இணைந்து ஒரு வருடத்துக்குள் தமிழகத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
    Published by:Karthick S
    First published: