இலங்கை பணியாளர்கள் கூட்டமைப்பு ஏற்பாடு செய்த மே தினக் கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக
பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை நான்கு நாள் பயணமாக இலங்கை சென்று திரும்பினார். இந்த பயணத்தின்போது, இலங்கையில் உள்ள தமிழ் தலைவர்கள் மற்றும் அரசுசாரா அமைப்பினரை சந்தித்து அங்கு நிலவும் சூழல் குறித்து பேசினார்.
பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று தமிழகம் திரும்பிய அவர், சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், இலங்கையில் இருக்கக்கூடிய மிக முக்கியமான பிரச்னை டாலர் அதற்கு தீர்வு கொடுப்பதற்காக நமது நாடு கடுமையாக வேலை செய்து கொண்டிருக்கிறது என்று கூறினார்.
ஒன்றரை மில்லியன் டாலர் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு உதவியாக சென்றிருக்கிறது என்றும், அவசர கால உதவியாக பிரதமர் நரேந்திர மோடி சார்பில் மருத்துவம் மற்றும் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை வழங்கி வருகிறது எனவும் தெரிவித்தார்.
மேலும், இலங்கையை வருவாயில் மிகவும் பின்தங்கிய நாடுகளின் பட்டியலில் சேர்க்க இந்திய அரசு முயற்சி செய்து கொண்டிருக்கிறது என்று கூறிய அண்ணாமலை, உக்ரைனுக்கு கிடைத்த உதவி போன்ற இலங்கைக்கு கிடைப்பதற்கு முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறது என்றார்.
இந்நிலையில், இலங்கை பயணம் குறித்த கேள்விகளுக்கு நியூஸ் 18-க்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டியளித்தார். இலங்கை பயணம் மற்றும் தமிழ் ஈழம் குறித்த நிலைபாடு என்ன என்ற கேள்விக்கு, பதிலளித்துப் பேசிய அவர், “பாரதிய ஜனதா கட்சியின் நிலைப்பாடு, நம்முடைய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள் மிகத் தெளிவாக இதைப்பற்றி சொல்லியிருக்கிறார்.
இலங்கையினுடைய யூனிட்டி மற்றும் இன்டகிரேட்டியில் காம்ப்ரமைஸ் இல்லாமல், அமைதிக்கும் காம்ப்ரமைஸ் இல்லாமல் குறிப்பாக 1987-ல் இரண்டு நாடுகளும் ஒத்துக்கொண்டு போட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், அதாவது ராஜீவ்காந்தி-ஜெயவர்தனா கையெழுத்திட்டபடி, ஆர்ட்டிகள் 13 ஐ நடைமுறை படுத்த வேண்டும் என்பதுதான் இந்தியாவின் நிலைப்பாடு. அதைத்தான் சொல்லிக் கொண்டு இருக்கிறோம்.
Must Read : இந்துக்களுக்கு மட்டுமல்ல கிறிஸ்தவ இஸ்லாமிய நம்பிக்கையில் அரசு தலையிட்டாலும் பாஜக குரல் கொடுக்கும் - அண்ணாமலை
ஆர்ட்டிகள் 13 நடைமுறை படுத்தப்பட்டு, குறிப்பாக ஈழத்தில் இரண்டு முறை தேர்தல் நடத்தப்பட்டு, இரண்டு முறை முதலமைச்சர்கள் வந்தும் கூட, அவர்களுக்கு (ஈழத் தமிழர்களுக்கு) முழுமையான அதிகாரத்தை இலங்கை வழங்கவில்லை. இதுதான் பிரச்சினை.
ஆகவே, இந்தியாவின் நிலைப்பாடு ஆர்ட்டிகள் 13-ஐ நடைமுறைப்படுத்தி, சட்டரீதியாக லேண்ட் ரைட்ஸ் (நில உரிமை), ஃபினான்சியல் ரைட்ஸ் (பொருளாதார உரிமைகள்) உள்ளிட்ட அனைத்தையுமே, அந்த மாகாணத்தின் முதலமைச்சருக்குக் கொடுத்து அதன் மூலமாக அந்த மக்கள் செல்ஃப் கவர்ன்ஸ்க்கு (சுயச்சார்பு அரசாங்கமாக) விடவேண்டும் என்பதுதான் நிலைப்பாடு என்றார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.