சென்னை திருவொற்றியூர் அரிவாக்குளம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் 'D' பிளாக்கில் உள்ள 24 வீடுகள் திங்கட்கிழமை இடிந்து தரைமட்டமாகின. வீடுகளை இழந்து தவித்த 24 குடும்பங்களும் திருமண மண்டபங்களில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். முதலமைச்சர் உத்தரவின்படி பாதிக்கப்பட்ட மக்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்ட நிலையில், மாற்று வீடு ஒதுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் இடிந்து விழுந்த பகுதிகளை அண்ணா பல்கலைக்கழக பேராசிரியை முத்தாரம் தலைமையிலான மூவர் குழு ஆய்வு மேற்கொண்டது. ஏற்கனவே இடிந்து விழுந்த வீடுகளில் இருந்து கட்டுமான பொருட்களின் மாதிரிகளை வல்லுநர் குழு சேகரித்தது.
பாதியாக இடிந்து விழுந்த 'டி' பிளாக்கின் எஞ்சிய பகுதியை மாடியில் நடந்து சென்று ஆய்வுக் குழுவினர் பார்த்தறிந்தனர். மேலும், சேதமடைந்த நிலையில் உள்ள 312 வீடுகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. ஒரு மணி நேர ஆய்வுக்கு பிறகு சிமென்ட் பூச்சு, செங்கல், கான்கிரீட்டுக்கு பயன்படுத்தப்பட்ட இரும்பு கம்பி உள்ளிட்டவற்றை அதிகாரிகள் எடுத்துச் சென்றனர்.
இந்த ஆய்வு முடிவு 10 நாட்களுக்குள் அரசுக்கு சமர்ப்பிக்கப்படும் என்றும், தரம் உறுதிசெய்யப்படும் வீடுகளில் மட்டும் மக்கள் குடியேற அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் இடிந்த வீடுகளுக்கு அருகில் உள்ள சி மற்றும் இ பிளாக்குகளில் வசித்த 72 குடும்பங்களும் வெளியேற்றப்பட்டனர். இதேபோன்று மற்ற குடியிருப்புகளில் இருந்தவர்களையும் வெளியேறும்படி அறிவுறுத்தப்பட்டது. இதனால், மக்கள் தங்களது உடைமைகளை எடுத்துக் கொண்டு வெளியேறினர்.
Read More : சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
இந்நிலையில், திருவொற்றியூர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் தற்காலிகமாக தங்குவதற்கான மாத வாடகையை செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.பி சங்கர் தெரிவித்தார்.
குடிசை மாற்று வாரிய குடியிருப்பின் அருகிலேயே அவர்களுக்கு மாற்று இடம் ஒதுக்கப்படும் என்றும் சட்டமன்ற உறுப்பினர் கே.பி சங்கர் உறுதியளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.