Home /News /tamil-nadu /

அன்றே சொன்னார் அண்ணா: லடாக் எல்லை விவகாரம் நீண்டகால போருக்கு வழிவகுக்கும்...

அன்றே சொன்னார் அண்ணா: லடாக் எல்லை விவகாரம் நீண்டகால போருக்கு வழிவகுக்கும்...

பேரறிஞர் அண்ணா

பேரறிஞர் அண்ணா

சீனா எப்போதெல்லாம் பலம்பெறுகிறதோ, அப்போதெல்லாம் தன் எல்லையை விரிவாக்கவே முனைகிறது என குற்றம் சாட்டினார் அண்ணா.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    1962 இந்திய-சீன போர் மூண்ட சூழலில் மாநிலங்களவையில் முழங்கிய அண்ணா, லடாக் எல்லை விவகாரம் நீண்ட கால போருக்கு வழிவகுக்கும் என்றும் குறிப்பிட்டுப் பேசினார்.

    சீனாவுக்கு எதிரான போரில் மத்திய அரசுக்கு அளவற்ற அதிகாரம் வழங்கும் தீர்மானத்தை ஆதரித்து பேசினார் அண்ணா. நாட்டின் கவுரவத்தையும், சுதந்திரத்தையும், சுயாட்சியையும் காக்கிற வகையிலான உன்னத லட்சியத்துக்காக நாடே ஒன்று திரண்டு நிற்கிறது என்றார்.

    ஆக்கிரமிப்பாளரின் குறிக்கோள் எதுவாக இருந்தாலும், நாட்டின் கவுரவத்தை பாதுகாக்கவே நாம் விரும்புகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.

    ஜனநாயக அரசு பலம் கொண்டதுதான் என்பதை நிரூபிக்க, ஆக்கிரமிப்பு தோற்கடிக்கப்பட வேண்டும் என்றும், சீனர்கள் அவர்கள் எல்லைக்குள் விரட்டியடிக்கப்பட வேண்டும் என அரசியல் வேற்றுமைகளை மறந்து அனைத்து அமைப்புகளும் முழங்குவதாகவும் அண்ணா கூறினார். சீன ஆக்கிரமிப்புக்கான உள்நோக்கத்தை கண்டறிவதுடன், போர் முயற்சிகளை பலப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

    பேச்சுவார்த்தைக்கு நாம் தயாராக இருக்கும்போது, சீனா ஏன் போரிட வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். அணிசேரா கொள்கையை பலவீனம் என சீனர்கள் கருதுவதாகவும், நம்மால் சண்டை போட இயலாது என நினைக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.

    நாம் சண்டையிட மாட்டோம் எனக் கூறுவதன் பொருள் நம்மால் சண்டையிட முடியாது என்பதல்ல என்ற பாடத்தை சீனாவுக்கு புகட்டுவோம் என்றார் அண்ணா.

    சீனா எப்போதெல்லாம் பலம்பெறுகிறதோ, அப்போதெல்லாம் தன் எல்லையை விரிவாக்கவே முனைகிறது என குற்றம் சாட்டிய அண்ணா, சீன தலைவர் ஒருவர் திபெத் சீனாவுக்கு சொந்தம் என்றும், பூடானும், சிக்கிமும், லடாக்கும் திபெத்துக்கு சொந்தம் என்றும் பேசியதை குறிப்பிட்ட சுட்டிக்காட்டினார். இந்த கருத்து நடைமுறைப்படுத்தப்பட்டால் அது நீண்ட கால போருக்கு வழிவகுக்கும் என்றும் குறிப்பிட்டார்.

    Must Read... தாய்க்கு பெயர் தந்த தனையன்... தமிழ்நாட்டின் தலைமகன் அண்ணா!

    திமுக ஊடகங்களில் போர் தொடர்பான விளம்பரங்களுக்கு இலவசமாக இடம் ஒதுக்க தயாராக இருப்பதாக கூறிய அண்ணா, தொடர் பிரசாரங்களின் மூலம் சீனர்களை விரட்டுவதில் நாம் ஒரே குறிக்கோள் கொண்டவர்கள் என்பதை மக்கள் உணரச்செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

    மேலும் படிக்க.... அண்ணா நினைவுநாள்: மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னையில் அமைதிப் பேரணி

    நாட்டின் கவுரவத்தையும், பாதுகாப்பையும் காக்கும் போரின் பெருமைக்குரிய அணிவகுப்பு பெயர் பட்டியலில் திமுகவின் பெயரை பொறிக்கிறேன் என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார் அண்ணா.

    இன்று அறிஞர் அண்ணாவின் 52ஆவது நினைவு நாள்...
    Published by:Suresh V
    First published:

    Tags: Anna, China vs India, DMK

    அடுத்த செய்தி