அரியலூர் மருத்துவக் கல்லூரி கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திறக்கப்பட்ட நிலையில், இரண்டு ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. தற்போது இக்கல்லூரியில் நவீன மருத்துவமனை கட்டப்பட்டு மாவட்ட மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட உள்ளது.
இந்நிலையில் நீட் தேர்வு போராட்டத்தில் உயிரை மாய்த்துக்கொண்ட அனிதாவின் நினைவாக அரியலூர் மாவட்டம் அரியலூர் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 22 கோடி செலவில் 850 பேர் அமரக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ள அரங்கத்திற்கு அனிதா நினைவு அரங்கம் என பெயர் சூட்டப்பட உள்ளது.
இதுதொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரியலூர் மாவட்டத்தில் குழுமூர் கிராமத்தில் ஏழை ஆதிதிராவிடக் குடும்பத்தில் பிறந்த ஒரு கூலித் தொழிலாளியின் மகள் அனிதா. அவர் சிறுமியாக இருந்தபோதே அவரின் தாயார் இறந்துவிட்டார். அவர் தமிழ்வழிக் கல்வியில் பயின்று, அரியலூர் மாவட்டத்தில் 12ஆம் வகுப்புத் தேர்வில் 1200-க்கு 1176 மதிப்பெண்கள் பெற்றிருந்த நிலையில், ஒன்றிய அரசு, மருத்துவ சேர்க்கையினை 12ஆம் வகுப்புத் தேர்வு மதிப்பெண்ணுக்கு பதிலாக, நீட் மதிப்பெண் அடிப்படியிலேயே நடைபெறும் என்ற அறிவிப்பினால் மனமுடைந்தார்.
ஏழை கிராமப்புற மாணவர்கள் நீட் தேர்வுக்குத் தயாராவதற்குத் தேவையான விலையுயர்ந்த நீட் தேர்வு பயிற்சிகளை பெறுவது சாத்தியமில்லை என்பதையும், 12-ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில், மருத்துவ சேர்க்கை தேர்வுகள் நடத்தப்பட்டால் மட்டுமே, தன்னை போன்ற கிராமப்புற மாணவர்கள் மருத்துவ இடங்களைப் பெற முடியும் என்பதையும் உணர்ந்து, நீட் தேர்வு கிராமப்புற மாணவர்களின் நலன்களுக்கு எதிரானது என அனிதா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
நீட் தேர்வின் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்ற இந்திய உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்குப் பிறகு, தீர்ப்பு வெளியான ஒன்பது நாட்களில் அனிதா தனது இன்னுயிரை 2017 செப்டம்பர் 1-ம் தேதி மாய்த்துக் கொண்டார். அவரது மரணம் நீட் தேர்வு முறையின் கொடூரத்தை உலகுக்கு உணர்த்தியது.
நீட் ரத்து மசோதாவிற்கு ஒன்றிய அரசு விரைவில் ஒப்புதல் தர வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
அரியலூர் மருத்துவக் கல்லூரி வளாகம் 2022 ஜனவரி 12 ஆம் தேதி முதலமைச்சர் முன்னிலையில் பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. தற்போது இந்த புதிய கல்லூரியில் நவீன மருத்துவமனை கட்டப்பட்டு இம்மாவட்ட மக்களுக்கு இன்று அர்ப்பணிக்கப்பட உள்ளது. இவ்வேளையில் நீட் எனும் தேர்வினை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நிகழ்த்தி, தனது இன்னுயிரை இழந்த அனிதா நினைவாக அரியலூர் மாவட்டம், அரியலூர் மருத்துவக் கல்லூரி வளாகத்தில், 22 கோடி ரூபாய் செலவில், 850 பேர் அமரக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ள அரங்கத்திற்கு அனிதா நினைவு அரங்கம் என பெயர் சூட்டப்படும்” என அறிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Anitha, Ariyalur, CM MK Stalin, Neet, Neet Exam