சட்டசபையில் 68 ஆண்டுகளுக்கு பிறகு முடிவுக்கு வரும் ஆங்கிலோ இந்தியன் பிரதிநிதித்துவம்...!

மாதிரிப் படம்

தமிழக சட்டசபையில் 1952-ம் ஆண்டில் இருந்து இதுவரை ஆங்கிலோ இந்தியன் பிரதிநிதியாக 3 ஆண்களும், 7 பெண்களும் நியமிக்கப்பட்டு இருக்கின்றனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
தமிழ் நாட்டு சட்டசபையில் 68 ஆண்டுகளுக்கு பிறகு முடிவுக்கு வரும் ஆங்கிலோ இந்தியன் பிரதிநிதித்துவம்.

இந்திய அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டபோது, நாட்டில் ஆங்கிலோ இந்தியன் வகுப்பினர் அதிகம் இருந்தனர். எனவே இந்த வகுப்பினருக்காக அவர்களில் இருந்து ஒருவரை சட்டசபையின் உறுப்பினராக கவர்னரே நியமிக்கலாம் என்று அரசியல் சாசனத்தில் அனுமதி அளிக்கப்பட்டது.

ஆரம்பத்தில் அந்த சாசனத்தில், மாநில கவர்னர் விரும்பும் எண்ணிக்கையில் ஆங்கிலோ இந்தியன் உறுப்பினர்களை நியமித்துக் கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. பின்னர் அந்த அரசியல் சாசனத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு அதன்படி, அந்தந்த மாநிலத்தில் ஆங்கிலோ இந்தியன் வகுப்பினருக்கு பிரதிநிதித்துவம் தேவை என்று கவர்னர் கருதினால், ஒருவரை நியமித்துக்கொள்ளலாம் என்று மாற்றப்பட்டது.

பொதுவாக மாநில அரசு தேர்வு செய்யும் நபரை அவர்களுக்கான நியமன எம்.எல்.ஏ.வாக கவர்னர் அங்கீகரித்து வருகிறார். ஆனாலும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறும் எம்.எல்.ஏ.க்களுக்கு வழங்கப்படும் அதே சம்பளம் (தற்போது ரூ.1.05 லட்சம்), சலுகைகள் போன்றவற்றை நியமன எம்.எல்.ஏ.க்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

சட்டசபையில் அவர்கள் பேசுவதற்கு நேரம் ஒதுக்கப்படுகிறது. அவர்கள் தங்களின் வகுப்பினருக்கு தேவையான கோரிக்கைகளை முன்வைக்க வாய்ப்பு வழங்கப்படுகிறது. என்றாலும், சட்டசபைகளில் நடக்கும் வாக்கெடுப்புகளில் மட்டும் அவர்கள் பங்கேற்க முடியாது. அப்போதெல்லாம் அவர்கள் அவைக்கு வெளியே அனுப்பப்படுவார்கள்.

Also read... சபாநாயகர் ஆகும் அப்பாவு... யார் இவர்? திமுக தேர்ந்தெடுத்தது ஏன்?

தமிழ் நாட்டைப் பொறுத்தவரை 1952-ம் ஆண்டில் இருந்து 2016-ம் ஆண்டு வரை ஆங்கிலோ இந்தியன் வகுப்பினருக்காக ஒருவர் நியமிக்கப்பட்டு வருகிறார். 1952-57-ம் ஆண்டில் அமைந்த முதல் சட்டசபையில் ஆங்கிலோ இந்தியன் பிரதிநிதியாக டபுள்யு.ஜெ.பெர்ணான்டஸ் நியமிக்கப்பட்டார்.

1957-71 ஆகிய ஆண்டுகளில் முறையே அமைந்த இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் சட்டசபையில் ஏ.சுயாரஸ் என்ற பெண் தொடர்ந்து நியமிக்கப்பட்டிருந்தார். அதன் பின்னர், 1971-77-ம் ஆண்டுகளில் ஆல்டா மில்லிசெண்ட் பவ்லர், 1977-80 மற்றும் 1980-85-ம் ஆண்டுகளில் மார்கரெட் எலிசபெத் பெலிக்ஸ், 1985-89-ம் ஆண்டுகளில் ஜி.கே.பிரான்சிஸ், 1989-91-ம் ஆண்டுகளில் ஆஸ்கர் சி.நிக்ளி, 1991-96-ம் ஆண்டுகளில் பெண் டாக்டர் பெட்ரிக்ஸ் டிசோசா, 1996-2001-ம் ஆண்டுகளில் ஆனி டிமாண்டி, 2001-2006-ம் ஆண்டுகளில் சாண்ட்ரா டான் கிரேவால், 2006-2011-ம் ஆண்டுகளில் ஆஸ்கர் சி.நிக்ளி, 2011-2016-ம் ஆண்டுகளில் டாக்டர் நான்சி ஆன் சிந்தியா பிரான்சிஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

கடந்த 2016-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலுக்கு பிறகு 15-ம் சட்டசபை அமைந்தது. அப்போது ஆங்கிலோ இந்தியன் பிரதிநிதியாக நான்சி ஆன் சிந்தியா பிரான்சிஸ் மீண்டும் நியமிக்கப்பட்டார்.

தமிழக சட்டசபையில் 1952-ம் ஆண்டில் இருந்து இதுவரை ஆங்கிலோ இந்தியன் பிரதிநிதியாக 3 ஆண்களும், 7 பெண்களும் நியமிக்கப்பட்டு இருக்கின்றனர். ஆனால், தமிழகசட்டப்பேரவையில் ஆங்கிலோ - இந்திய நியமன உறுப்பினர் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. நியமன உறுப்பினர் முறையை ரத்து செய்யும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றத்தில் ஆங்கிலோ - இந்திய நியமன உறுப்பினர் முறை ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது, அந்த வகையில், கடந்த 68 ஆண்டுகளாக தமிழக சட்டசபையில் 234 எம்.எல்.ஏ.க்களுடன், 235-வது எம்.எல்.ஏ.வாக அமர்ந்திருந்த ஆங்கிலோ இந்தியன் பிரதிநிதி, 16 வது சட்டசபையில் இடம்பெறமாட்டார் என்பதே நிதர்சனம்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: