சட்டைக்குள் சட்டை அணிந்து அதற்குள் கட்டுக்கட்டாக பணத்தை கடத்தி வந்த ஆந்திர இளைஞரை சென்னை போலீசார் கைது செய்தனர்.
அயன் திரைப்படத்தில் வெளிநாட்டில் இருந்து வைரம் கடத்தி வரும் சூர்யாவிடம் சோதனை மேற்கொள்ளும் சுங்கத்துறை அதிகாரி, வைரத்தை கண்டுபிடிக்க முடியாமல் திணறுவார். கடைசியில் தன் தலையில் மறைத்து வைத்த வைரங்களை தானே வெளிப்படுத்துவார் சூர்யா.
அதுபோல சட்டைக்குள் கரன்சி கட்டுகளை பதுக்கி கொண்டு சென்னை வந்துள்ளார் ஆந்திர இளைஞர். ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெள்ளியன்று காலை ஒரு விரைவு ரயில் வந்தது. ரயில் நிலைய நடைமேடை எண் 4-ல் வந்து நின்ற ரயிலில் இருந்து இறங்கிய பயணிகளை சென்ட்ரல் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் சோதனை செய்தனர்.
அப்போது ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி மாவட்டத்தைச் சேர்ந்த சாய்கிருஷ்ணா என்பவர் நடந்து கொண்ட விதம் சந்தேகப்படும்படியாக இருக்க, அவரை ரயில்வே பாதுகாப்பு படை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போதுதான் 61 லட்ச ரூபாய் பணத்துடன் அவர் சென்னை வந்து இறங்கியது தெரியவந்தது.
இதையும் படிங்க: சொந்த மக்களே என் முதுகில் குத்தி விட்டனர் - மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்ரே வேதனை
தான் அணிந்திருந்த சட்டையை கழற்றிய சாய்கிருஷ்ணா, அதனுள் கோட் போன்ற ஆடைக்குள் பிரத்யேக அறை அமைத்து கிட்டத்தட்ட 19 லட்ச ரூபாய் பணத்தை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து சாய்கிருஷ்ணா வைத்திருந்த பையை சோதனையிட்ட போலீசார் அதில் 42 லட்ச ரூபாய் இருந்ததைக் கண்டுபிடித்தனர்.
இந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாத நிலையில், அதனை கைப்பற்றிய ரயில்வே பாதுகாப்பு படை போலீசார், சாய் கிருஷ்ணாவிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது நகை வாங்குவதற்காக இந்த பணத்தை கொண்டு வந்ததாக தெரிவித்துள்ளார். ஆனால் உரிய ஆவணங்கள் இல்லாததால் சாய் கிருஷ்ணாவை வருமானவரித்துறையிடம் ஒப்படைக்க ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
மேலும் படிக்க: 16 வயது இஸ்லாமிய பெண்ணின் திருமணத்தை அங்கீகரித்த பஞ்சாப்- ஹரியானா உயர் நீதிமன்றம்: காரணம் என்ன?
ஏற்கனவே கடந்த 21 ஆம் தேதி விஜயவாடாவில் இருந்து வந்த ரயில் பயணியிடம் இருந்து 78 லட்சம் ரூபாய் பணமும், மீண்டும் 16 ஆம் தேதி விஜயவாடாவில் இருந்து வந்த பயணியிடம் இருந்து 46 லட்சம் ரூபாய் பணமும் ரயில்வே பாதுகாப்புப்படை போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. மூன்றாவது முறையாக ரயில் பயணியிடம் இருந்து பணம் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Arrested, Smuggling, Youth arrested