World Environment Day: இயற்கைக்கு அவசர சிகிச்சை தேவைப்படுகிறது: அன்புமணி ராமதாஸ்!

உலக சுற்றுச்சூழல் தினம்

இயற்கைக்கு அவசர உதவி தேவைப்படுகிறது. புவிவெப்பமடைதலால் உருவாகியுள்ள காலநிலை அவசரநிலை; இயற்கைவள அழிவினால் உருவாகியுள்ள உயிர்ச்சூழல் அவசரநிலை; அதிகரித்துவரும் சுற்றுச்சூழல் மாசுபாடு ஆகியன உடனடியாக போக்கப்பட வேண்டும்

  • Share this:
    இயற்கைக்கு அவசர சிகிச்சை தேவைப்படுவதாக தெரிவித்துள்ள பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழகத்தில் சூழல் மண்டலங்களை மறு உருவாக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

    உலக சுற்றுச்சூழல் நாள் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நாளை முன்னிட்டு பாமக இளைஞரணித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக சுற்றுச்சூழல் நாள் ஜூன் 5-ஆம் நாளான இன்று கடைபிடிக்கப்படும் நிலையில், தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் நிலை மிகவும் கவலையளிப்பதாக உள்ளது. கிட்டத்தட்ட அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்க வேண்டிய நிலையில் உள்ள சுற்றுச்சூழலை காப்பாற்ற உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படாவிட்டால் தமிழ்நாடு வளர்ச்சிப் பாதைக்கு பதிலாக வீழ்ச்சிப் பாதையில் பயணிக்க நேரிடும்” என்று எச்சரித்துள்ளார்.

    நடப்பாண்டிற்கான உலக சுற்றுச்சூழல் நாள் முழக்கமாக ‘சூழல்மண்டல மறு உருவாக்கம்’  என்பதை ஐக்கிய நாடுகள் அமைப்பு முன்வைத்துள்ளதாக தெரிவித்துள்ள அவர்,   “இயற்கைக்கு அவசர உதவி தேவைப்படுகிறது. புவிவெப்பமடைதலால் உருவாகியுள்ள காலநிலை அவசரநிலை; இயற்கைவள அழிவினால் உருவாகியுள்ள உயிர்ச்சூழல் அவசரநிலை; அதிகரித்துவரும் சுற்றுச்சூழல் மாசுபாடு ஆகியன உடனடியாக போக்கப்பட வேண்டும். இவை அனைத்தையும் தடுத்து ஒரு உன்னதமான எதிர்காலத்தை அடுத்த பத்தாண்டுகளுக்குள் உருவாக்குவது சாத்தியம் தான். அதற்கான ஆற்றலும் அறிவு வளமும் இன்றைய உலகில் உள்ளது. அனைவரும் ஒன்றிணைந்து அனைத்து மட்டத்திலும் தீவிரமாக செயல்படுவது தான் பூவுலகைக் காப்பதற்கான உடனடி தேவை” என குறிப்பிட்டுள்ளார்.

    இதையும் படிங்க.. தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள  வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

    மேலும், “சூழல் மண்டலங்கள் உயிர்வாழ்வின் ஆதாரம். சூழல் மண்டலங்கள் நலமாக இருந்தால் பூவுலகும் அதன் மக்களும் நலமாக வாழ்வர். எனவே சூழல் மண்டலங்களின் மறு உருவாக்கத்திற்கான பத்தாண்டுகள் எனும் பிரச்சாரத்தை இந்த நாளில் ஐ.நா. தொடங்குகிறது. சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியது மிகவும் முக்கியம். ஆனால், அது மட்டும் போதாது... அழிக்கப்பட்ட இயற்கை வளங்களை மீண்டும் உருவாக்க வேண்டும் என்பது இப்பரப்புரையின் நோக்கம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துதல், உயிரி பன்மய வளத்தை பாதுகாத்தல், மனித உடல்நலத்தை காப்பாற்றுதல் ஆகிய அனைத்திற்கும் சூழல் மண்டலங்களை மறு உருவாக்குவது இன்றியமையாத தேவையாகும். காடுகளையும், உயிரிப்பன்மய வளத்தையும் சீரழித்ததன் விளைவாகவே கொரோனா பெருந்தொற்று உருவானது என்பதை கவனத்தில் கொண்டால் சூழல் மண்டலங்களின் முக்கியத்துவம் புரியும்” என கூறியுள்ளார்.

    காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதற்காக கரியமில வாயு அளவை 2030ஆம் ஆண்டுக்குள் பாதியளவாக குறைப்பதற்கு பாரிஸ் உடன்படிக்கையில் உலக நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளதாகவும்  ஐநா நீடித்திருக்கும் வளர்ச்சி இலக்குகளின் கீழ் 17 குறிக்கோள்களை 2030-க்குள் எட்ட உலக நாடுகள் உறுதி ஏற்றுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ள அன்புமணி ராமதாஸ்,  சூழல்மண்டல மறுஉருவாக்கம்’ இந்த இலக்குகளை அடைவதற்கான சிறந்த வழி என தெரிவித்துள்ளார்.

    “‘அனைத்து சூழல் மண்டலங்களும் மனித செயல்களால் மிக மோசமாக சீரழிக்கப்பட்டுள்ளன. 1992 ஆம் ஆண்டுக்கு பிறகு உலகில் 42 கோடி எக்டேர் காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. இதனால் 175 கோடி மக்கள் பாதிப்படைந்துள்ளனர். மொத்த விளைநிலங்களில் 20% உற்பத்தி திறனை இழந்துள்ளது. இதனால் 12% உணவு உற்பத்தி பாதிக்கப் பட்டுள்ளது. 66% கடல்வளம் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் மூன்றில் ஒரு பங்கு மீன்வளம் பாதிப்பை சந்தித்துள்ளது. 2000-ஆவது ஆண்டுக்கு பின் நகர மக்களில் 50% பேருக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்கவில்லை’’ என்ற ஐநாவின் அறிக்கையை மேற்கோள் காட்டியுள்ள அன்புமணி ராமதாஸ், சூழல் மண்டல மறுசீரமைப்பு மாபெரும் பலன்களை அளிக்கக் கூடியது என்று தெரிவித்துள்ளார்.

    மேலும் படிக்க...தமிழகத்தின் சில பகுதிகளில் அடுத்த இரு நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு..

    மேலும், ‘சூழல்மண்டல மறு உருவாக்கம்’ எனும் இலக்கினை தமிழ்நாடில் முதன்மை நோக்கமாக செயல்படுத்த வேண்டும். விழிப்புணர்வை உருவாக்குதல், தமிழ்நாட்டின் அனைத்து வகை சூழல் மண்டலங்களையும் பாதுகாத்தல், சீரழிந்த நிலையில் உள்ளவற்றை மறுசீரமைத்தல் ஆகிய பணிகளை தொடர்புடைய அனைத்து தரப்பினரும் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, தமிழ்நாட்டின் நீர்வள மாசுபாட்டினையும் அழிவினையும் தடுத்து அவற்றை மறு உருவாக்கம் செய்ய வேண்டும். தமிழக நகரப்பகுதிகளை பசுமை நகரங்களாக மாற்ற வேண்டும். கடலோரப்பகுதிகளை மீளமைக்க வேண்டும். விளைநிலங்கள் அழிவை தடுத்து சீர் செய்ய வேண்டும். காடுகளை காப்பாற்றி பசுமைப் பகுதிகளை அதிகமாக்க வேண்டும்” என்றுவலியுறுத்தியுள்ளார்.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Murugesh M
    First published: