துணை வேந்தரை மாநில அரசே நியமிக்க வழிவகுக்கும் சட்ட முன்வடிவை தமிழக சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு
பாமக ஆதரவு தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள சென்னைப் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், அண்ணாப் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார், பெரியார் திறந்தநிலை பல்கலைக்கழகம், திருவள்ளுவர் பல்கலைக்கழகம், ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம் ஆகிய மாநில பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்க வழிவகுக்கும் சட்டமசோதாவை சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்தார்.
குஜராத் பல்கலைக்கழகச் சட்டம் & தெலங்கானா பல்கலைக்கழக சட்டத்தில், அம்மாநிலங்களின் பல்கலைக் கழகங்களுக்கு துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரம் அந்த மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், கர்நாடகாவில் அந்த மாநில அரசின் ஒப்புதலுடன் துணைவேந்தர் நியமனம் நடைபெற்று வருவதாகவும், அதேபோல் தமிழ்நாட்டிலும் மாநில அரசே துணைவேந்தர்களை நியமிக்க அதிகாரம் வழங்கும் வகையில் தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் சட்டத்தில் உரிய திருத்தம் மேற்கொள்ள அரசு முடிவு செய்து அதற்கான சட்டமுன்வடிவைத் தாக்கல் செய்வதாக சட்டப்பேரவையில் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க - தமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் - நடைமுறை விதிகள் என்னென்ன
தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு பாமக ஆதரவும் வரவேற்பும் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸின் ட்விட்டர் பதிவில், ’
தமிழ்நாட்டில் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்க வகை செய்யும் சட்ட முன்வரைவு தமிழக சட்டப்பேரவையில் இன்று கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டிருக்கிறது. தமிழக அரசின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது!
இதையும் படிங்க - முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம்... எம்.எல்.ஏ.க்களுக்கு கிடையாதா: ஓபிஎஸ் கேள்வி
பல்கலைக்கழக நிர்வாகத்தில் தேவையற்ற குழப்பங்களைத் தடுக்க துணைவேந்தர்களை அரசே நியமிக்க வேண்டும் என்று கடந்த பல ஆண்டுகளாக பா.ம.க வலியுறுத்தி வருகிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் யோசனை செயல்திட்டம் பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது’என்று குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்துக்கான துணைவேந்தரை தமிழ்நாடு அரசே நியமிக்க வழிவகை செய்யும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அனைத்து மாநில பல்கலைக்கழகங்களுக்கும் துணைவேந்தரை நியமிக்க வழிவகை செய்யும் சட்ட திருத்தத்திற்கான சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.