கிரிக்கெட் போட்டிகளிலும் மது மற்றும் புகையிலை குறித்த மறைமுக விளம்பரங்கள் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன, அவற்றையும் தடை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "சோடா விளம்பரம் என்ற பெயரில் மது விளம்பரங்களையும், சிடி-க்கள், பான்மசாலாக்கள் பெயரில் புகையிலை விளம்பரங்களையும் மறைமுகமாக செய்ய தடை விதித்து மத்திய அரசின் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இது சமூகத் தீமைகளைத் தடுக்கும்.
மது மற்றும் புகையிலைப் பழக்கங்களிலிருந்து மீண்டு வாழ நினைப்போரையும், சிறுவர்களையும் மது மற்றும் புகையிலைப் பழக்கங்களை நோக்கி இந்த மறைமுக விளம்பரங்கள் இழுக்கின்றன. மதுப்பழக்கமும், புகைப்பழக்கமும் அதிகரிப்பதற்கு இத்தகைய மறைமுக விளம்பரங்கள் தான் காரணம்.
மது மற்றும் புகையிலை தொடர்பான மறைமுக விளம்பரங்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று பாமகவும், பசுமைத்தாயகம் அமைப்பும் தொடர்ந்து போராடி வருகின்றன. இப்போது மறைமுக விளம்பரங்கள் தடை செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் திடல்களில் வைக்கப்படும் மது மற்றும் புகையிலை சார்ந்த மறைமுக விளம்பரங்கள், நேரடி ஒளிபரப்பின் மூலம் கோடிக் கணக்கானோரை சென்றடைந்து தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அவற்றையும் தடை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.