வன்னியர்கள் இடஒதுக்கீடு தொடர்பான பாமகவின் போராட்டம் தொடரும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவீத ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு சட்டம் கொண்டு வந்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, வன்னியர் இடஒதுக்கீடு அரசியலமைப்பிற்கு எதிரானது என்று கூறி தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், பி.ஆர் கவாய் அமர்வு இன்று தீர்ப்பளித்தது.
அதில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவை உறுதி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 1994ம் ஆண்டு சட்டத்தை மீறும் வகையில் இடஒதுக்கீடு இருக்கக்கூடாது என்றும் சாதி அடிப்படையில் உள் ஒதுக்கீடு வழங்கக்கூடாது எனவும் உள் ஓதுக்கீடு வழங்கும் போது அதற்கான நியாயமான காரணங்களை தெளிவுப்படுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறினர்.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், “உச்சநீதிமன்ற தீர்ப்பு எங்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது” என்று கூறினார். மேலும், “வன்னியர் உள் ஒதுக்கீட்டு சட்டம் செல்லாது என்று உயர் நீதிமன்றம் கூறிய 7 காரணங்களில் 6 காரணத்தை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. தமிழ்நாடு அரசு ஆணையம் ஒன்றை அமைத்து புள்ளிவிபரங்களை திரட்டி மீண்டும் சட்டம் கொண்டு வர வேண்டும்” என்று கூறினார்.
Must Read : 'பயிர்காப்பீட்டு தொகை வழங்குக' வாயில் கருப்புத்துணி கட்டி விவசாயிகள் போராட்டம்
வன்னியர்கள் இடஒதுக்கீடு தொடர்பான பாமகவின் போராட்டம் தொடரும் என்றும் போதுமான அளவு தரவுகள் இல்லாததே தீர்ப்பு சாதகமாக இல்லாததற்கு காரணம் எனவும் அன்புமணி ராமதாஸ் கூறினார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.