69% இட ஒதுக்கீட்டை காக்க சாதிவாரி கணக்கெடுப்பு தேவை என்று பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, மராட்டிய மாநிலத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மராத்தா சமூகத்தினருக்கு 16% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது செல்லாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. அதற்காக உச்சநீதிமன்றம் கூறியிருக்கும் காரணங்கள் தமிழகத்தில் நடைமுறையில் இருக்கும் 69% இட ஒதுக்கீட்டின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்பதால், தமிழக அரசு கூடுதல் விழிப்புடன் செயல்பட வேண்டும்.
மராட்டியத்தில் மராத்தா சமூகத்தினருக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டு ரத்து செய்யப்பட்டிருப்பதற்கு உச்சநீதிமன்றம் கூறியுள்ள காரணங்கள் கவனிக்கத்தக்கவை. ‘‘கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீட்டின் அளவு 50%-ஐ தாண்டக் கூடாது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை தளர்த்துவதற்கான அசாதாரண சூழல் மராட்டிய மாநிலத்தில் இல்லை. மராட்டியத்தில் 50 விழுக்காட்டுக்கும் கூடுதலாக இடஒதுக்கீடு வழங்குவதற்கான தேவை என்ன இருக்கிறது? என்பதை புள்ளிவிவரங்களுடன் மராட்டிய அரசு நிரூபிக்கவில்லை’’ என்று உச்சநீதிமன்றத்தின் அரசியல் சட்ட அமர்வு தீர்ப்பில் கூறியிருக்கிறது.
இந்திரா சகானி வழக்கின் தீர்ப்பில் உச்சநீதிமன்றத்தால் நிர்ணயிக்கப்பட்ட 50% உச்சவரம்புக்கும் கூடுதலாக இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தி வரும் மாநிலங்களில் தமிழ்நாடு குறிப்பிடத்தக்கதாகும். மராத்தா சமூக இட ஒதுக்கீட்டை ரத்து செய்வதற்காக உச்சநீதிமன்றம் கூறியுள்ள காரணங்களின் அடிப்படையில் தமிழ்நாட்டிலும் 69% இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று, உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே நிலுவையில் உள்ள இது குறித்த வழக்கில், சமூகநீதிக்கு எதிரான சக்திகள் வாதிடக்கூடும். அந்த ஆபத்தை தடுக்க சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி, தமிழ்நாட்டில் 50%-க்கும் அதிக இட ஒதுக்கீடு வழங்க வேண்டிய தேவை இருப்பதை புள்ளிவிவரங்களுடன் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். தமிழகத்தில் 69% இட ஒதுக்கீட்டை பாதுகாப்பதற்கு இதுதான் ஒரே வழி.
Also read... தமிழகத்தில் உடனடியாக முழு ஊரடங்கு: குடும்பங்களுக்கு தலா ரூ.5,000 - ராமதாஸ் வலியுறுத்தல்
69% இட ஒதுக்கீட்டுக்கு எதிராக ஏற்கெனவே ஒரு வழக்குத் தொடரப்பட்டு 15 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தப்பட்டு வந்தது. அவ்வழக்கில் 13.07.2010 அன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், ‘‘தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீடு செல்லும். எனினும், அடுத்த ஓராண்டுக்குள் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீட்டு பெறுவோரின் எண்ணிக்கையை உறுதி செய்து, அதனடிப்படையில் இட ஒதுக்கீட்டை நிர்ணயிக்க வேண்டும்’’ என்று ஆணையிட்டது. அதன்படி தமிழகத்தில் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீட்டின் அளவை தீர்மானிக்க வேண்டும் என்று பாமக தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. ஆனால், தீர்ப்பு வந்த போது ஆட்சியிலிருந்த திமுகவும், அதன்பின்னர் ஆட்சிக்கு வந்த அதிமுகவும் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தாமல் 69% இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தின. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தாமல் செயல்படுத்தப்படும் 69% இட ஒதுக்கீட்டை செல்லாது என்று அறிவிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் புதிய வழக்கு தொடரப்பட்டுள்ளது.
69% இட ஒதுக்கீட்டுக்கு எதிரான அந்த வழக்கு கோடை விடுமுறைக்குப் பிறகு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ள நிலையில், உடனடியாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி, தமிழ்நாட்டில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினரின் எண்ணிக்கை குறித்த புள்ளிவிவரங்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யாவிட்டால், மராட்டியத்தைப் போலவே தமிழ்நாட்டிலும் இட ஒதுக்கீட்டை காக்க முடியாது.
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தி தான் இட ஒதுக்கீட்டின் அளவை தீர்மானிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் 8 ஆண்டுகளுக்கு முன்பே ஆணையிட்டுள்ள நிலையில், அதற்கும் குறைவாக தமிழக அரசால் முன்வைக்கப்படும் எந்த ஆதாரத்தையும் உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளாது. இடஓதுக்கீடு தொடர்பான மற்றொரு வழக்கில், தமிழக மக்கள் தொகையில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினரின் எண்ணிக்கை 87% என்று தமிழக அரசின் சார்பில் முன்வைக்கப்பட்ட புள்ளிவிவரத்தை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது. இதற்கு காரணம் அவை சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் உத்தேசமாக தெரிவிக்கப்பட்டவை என்பது தான். இப்போது மராத்தா இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டிருப்பதற்கும் இது தான் காரணம் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
இட ஒதுக்கீட்டின் அளவு 50 விழுக்காட்டைத் தாண்டக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தப் போதிலும், நியாயமான காரணங்கள் இருந்தால் கூடுதல் இடஒதுக்கீட்டை அனுமதித்தே வந்திருக்கிறது. அதனடிப்படையில் தமிழகத்திலும் சாதிவாரி புள்ளிவிவரங்களை தாக்கல் செய்வதன் மூலம் 69% இட ஒதுக்கீட்டை பாதுகாக்க முடியும். எனவே, தமிழ்நாட்டில் இந்திய ஆட்சிப் பணி அதிகாரி தலைமையில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையத்தை அமைத்து, உடனடியாக சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தி, அதன் அடிப்படையில் தமிழகத்தில் ஒவ்வொரு சமூகத்திற்கும் இட ஒதுக்கீட்டின் அளவை தீர்மானிக்க வேண்டும். அதை உச்ச நீதிமன்றத்தில் தற்போது நடைபெற்று வரும் வழக்கு விசாரணையின் போது தெரிவித்து 69% இட ஒதுக்கீட்டை பாதுகாக்க வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Pmk anbumani ramadoss