வன்னியர் இடஒதுக்கீடு கோரி பாமக போராட்டம் - முதல்வரை சந்தித்து அன்புமணி மனு

வன்னியர் இடஒதுக்கீடு கோரி பாமக போராட்டம் - முதல்வரை சந்தித்து அன்புமணி மனு

அன்புமணி ராமதாஸ்

தங்களது கோரிக்கை அடங்கிய மனுவை பெற்றுக் கொண்ட முதலமைச்சர், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததாக அன்புமணி தெரிவித்தார்.

  • Share this:
    கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 20 சதவீத தனி இடஒதுக்கீடு கோரி பா.ம.கவினர் இன்று பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், இடஒதுக்கீடு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் உறுதியளித்ததாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

    கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்க கோரி சென்னையில் இன்று போராட்டம் நடைபெறும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்திருந்தார். போராட்டத்தில் பங்கேற்பதற்காக பல்வேறு பகுதிகளிலிருந்து சென்னைக்குள் பா.ம.க.வினர் நுழைய முயன்றனர். பெருங்களத்தூர் அருகே அவர்களுடைய வாகனங்களை போலீசார் தடுத்துநிறுத்தினர். போராட்டத்தில் பங்கேற்க போலீசார் அனுமதி மறுத்ததால் ஜி.எஸ்.டி சாலையில் பாமகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆம்னி பேருந்துகள் மீது ஏறிநின்று பா.ம.கவினர் முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சாலையின் தடுப்புச்சுவரை உடைத்து சேதப்படுத்தியதினர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

    இதனிடையே பெருங்களத்தூர் ரயில் நிலையத்தில் ரயிலை மறித்து பாமகவினர் போராட்டம் நடத்தினர். ரயில் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இதனால் பயணிகளின் பாதுகாப்பு கருதி தாம்பரம் முதல் கடற்கரை வரையிலான மின்சார ரயில்சேவை நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். சில மணி நேரங்களுக்குப் பிறகு ரயில் சேவை மீண்டும் தொடங்கியது.

    இதேபோன்று பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பாமகவினர் சென்னையை நோக்கி படை எடுத்தனர். அவர்களை அந்தந்த மாவட்ட எல்லைகளில் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். சென்னையில் பாதுகாப்புப் பணிக்காக 5 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    இந்த சூழலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சென்னை தலைமைச்செயலகத்தில் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்துப் பேசினார்.

    இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ், 20 சதவீத இடஒதுக்கீடு வழங்குமாறு கூறுவது சாதி ரீதியிலான கோரிக்கை இல்லை என்று தெரிவித்தார். இடஒதுக்கீடு வழங்கினால்தான் மேம்பாடு அடையும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். தங்களது கோரிக்கை அடங்கிய மனுவை பெற்றுக் கொண்ட முதலமைச்சர், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததாக தெரிவித்தார்.



    இதனிடையே வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு கோரி பாமக நடத்திய போராட்டத்தின் போது, ரயில்கள் மீது கல்வீசி தாக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்தது. இதுகுறித்து பேசிய பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தாங்கள் அறவழியில் போராட்டம் நடத்தியதாகவும், தொண்டர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதாலேயே பிரச்னை ஏற்பட்டதாகவும் கூறினார்.
    Published by:Yuvaraj V
    First published: