அதிமுக அரசு மீது கடந்த பல ஆண்டுகளாக ஊழல் குற்றச்சாட்டுகள், புகார்களை கூறி வந்த பாமக வரும் தேர்தலுக்கு அக்கட்சியுடன் கூட்டணி அமைத்தது. 7 மக்களவை தொகுதி மற்றும் 1 மாநிலங்களவை தொகுதி என்று தேர்தல் உடன்பாடு செய்யப்பட்டது.
இந்நிலையில், அதிமுக உடன் கூட்டணி வைத்தது ஏன்? என்று அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம் அளித்தார். “அடிமட்ட தொண்டர்கள், நிர்வாகிகளை அழைத்து அதிமுக உடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக முடிவெடுத்தோம்.
அப்போது இருந்த சூழல் வேறு. தற்போது உள்ள சூழல் வேறு. அதிமுக திமுகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்று கூறியது உண்மையே. ஆனால், தற்போது சூழல் மாறிவிட்டது.
பாஜகவை கடந்த ஓராண்டாக விமர்சித்த சிவசேனா அக்கட்சியுடன் தற்போது கூட்டணி வைத்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் எதிரெதிராய் இருந்த மாயவதியும் அகிலேஷ் யாதவும் கூட்டணி அமைத்துள்ளனர்.
அடுத்த தேர்தலுக்கு என்ன நிலைப்பாடு என்பது பற்றி தற்போது முடிவெடுக்க முடியாது ஒரு கட்சியை விமர்சித்தால் அதனுடன் கூட்டணி அமைக்கக் கூடாது என்று எதுவும் இல்லை. விமர்சனங்களை வைத்துப் பார்த்தால் இந்தியாவில் எந்தக் கட்சியும் கூட்டணி அமைக்க முடியாது.
தமிழக அரசு மீதான ஊழல் புகார்களை ஆளுநரிடம் அளித்ததை திரும்பப்பெறவில்லை. தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு. கூட்டணி சேர்வதால் பாமக தனது கொள்கைகளில் இருந்து பின் வாங்காது.
பாமக தனித்து நின்ற போது மக்கள் கண்டு கொள்ளவில்லை. எங்களது முடிவை மக்கள் அங்கீகரிக்கவில்லை. அதனால், நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டோம். அதிமுக - பாமக - பாஜக கூட்டணியை மக்கள் விரும்புகிறார்கள். 8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிராக முன்பு போல போராடுவோம்.
கூட்டணி, அரசியல் நிலைப்பாடு குறித்த கேள்விகளில் செய்தியாளர்களுக்கும் அன்புமணிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும், குட்கா புகார், ஜெயலலிதா மணிமண்டபம் குறித்த கேள்விகளுக்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.
Published by:Sankar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.