10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வேண்டும்: வெறும் தேர்ச்சி என்பது தவறான முடிவு - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

அன்புமணி ராமதாஸ்

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்ச்சியுடன் சேர்த்து மதிப்பெண்களும் வழங்கப்படவேண்டும் என்று பா.ம.க இளைஞரணிச் செயலாளர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

 • Share this:
  இந்தியாவில் கொரோனா பாதிப்பின் காரணமாக கடந்த மார்ச் மாதத்திலிருந்து பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த ஆண்டின் இறுதியில் 10 வகுப்புக்கு, 12-ம் வகுப்புகளுக்கு ஒரு சில மாதங்கள் பள்ளிகள் திறக்கப்பட்டன. மீதமுள்ள நாள்களில் வீட்டிலிருந்தே கல்வித் தொலைக்காட்சி வாயிலாகவும், ஆன்லைன் வகுப்புகள் வாயிலாகவும் கற்பிக்கப்பட்டது. ஆன்லைன் வகுப்பு என்பது தனியார் பள்ளிகளில் படிப்பவர்களுக்கும், பொருளாதாரத்தில் உயர் நிலையில் இருப்பவர்களுக்கு மட்டுமே சரியான முறையில் கிடைக்கும் சூழல் இருந்தது.

  இதற்கிடையில், கடந்த கல்வி ஆண்டை நிறைவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. 12-ம் வகுப்பு உள்ளிட்ட அனைத்து வகுப்புகளும் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இருப்பினும், 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு எதன் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தநிலையில், பா.ம.க இளைஞரணிச் செயலாளர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழில் எந்த மதிப்பெண்ணும் குறிப்பிடப்படாது என்றும் தேர்ச்சி என்ற குறிப்பு மட்டுமே இடம்பெறும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

  இவை உண்மை என்றால் அரசின் முடிவு மிகவும் தவறானது. மதிப்பெண் சான்றிதழில் மதிப்பெண்கள் குறிப்பிடப்படவில்லை என்றால் பத்தாம் வகுப்புடன் படிப்பை நிறுத்தி விட்டு பின்னாளில் பத்தாம் வகுப்பை கல்வித் தகுதியாக கொண்ட அரசு பணிகளுக்கு செல்வதிலும் மேல்நிலை வகுப்புகளில் சேர்வதிலும் சிக்கல் ஏற்படக்கூடும். கொரோனாவால் தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட கடந்த ஆண்டு கூட சான்றிதழ்களில் மதிப்பெண்கள் வழங்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு மதிப்பெண்கள் வழங்கப்படாவிட்டால் அதுவே மாணவர்களையும் அவர்களின் கல்வித்திறனையும் சிறுமைப்படுத்தும் செயலாகிவிடும்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  2020-21 கல்வியாண்டில் அனைத்து பள்ளிகளிலும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு குறைந்தது 3 அல்லது 4 தேர்வுகள் நடத்தப்பட்டிருக்கின்றன. அவற்றின் அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண்களுடன் கூடிய மதிப்பெண் சான்றிதழை வழங்க அரசு ஆணையிட வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
  Published by:Karthick S
  First published: