கடன் வசூல் என்று சுய உதவிக்குழு மகளிரை கொடுமைப்படுத்துவதை நிறுத்த வேண்டும் - அன்புமணி

அன்புமணி ராமதாஸ்

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடன் தவணை வசூலை அடுத்த 6 மாதங்களுக்கு ஒத்திவைக்கும்படி வங்கிகள், தனியார்துறை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி ஆணையிட வேண்டும் என அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

  • Share this:
    இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடன்களுக்கான தவணைத் தொகையை செலுத்தும்படி  தனியார் வங்கிகளும், நிதி நிறுவனங்களும் மிரட்டுவதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் இந்த மனிதநேயமற்ற செயல்கள் கண்டிக்கத்தக்கவையாகும்.

    தமிழ்நாட்டில் மூன்றரை லட்சத்திற்கும் கூடுதலான மகளிர் சுய உதவிக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு குழுவிலும் குறைந்தது 12 பேர் முதல் 20 பேர் வரை இருப்பார்கள். இவர்கள்  தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் வங்கிக் கணக்குத் தொடங்கி, வங்கிகளில் குறைந்த வட்டிக்கு கடன் பெற்று அதைக் கொண்டு சிறு தொழில்கள் அல்லது சிறு வணிகம் செய்து வருகின்றனர்.

    இதன்மூலம் பெண்கள் வாழ்க்கையில் தங்களின் சொந்தக் காலில் நிற்கத் தயாராவது மட்டுமின்றி, ஊரகப் பொருளாதாரமும் மேம்படுகிறது. அந்த வகையில் இது வறுமை ஒழிப்பு திட்டமாகவும் செயல்படுகிறது.

    ஆனால், கொரோனா வைரஸ் பரவல் அச்சத்தால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள், மகளிர் சுய உதவிக் குழுக்களின் செயல்பாடுகளை சிதைத்து இருப்பதுடன், அவர்களின் கவுரவம் மற்றும் கண்ணியத்தையும் குலைத்திருக்கிறது.

    கொரோனா வைரஸ் நோய் அச்சத்தால் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக சிதைந்து விட்டது. மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் சிறு தொழில்களிலும்,  சிறு வணிகங்களிலும் செய்திருந்த முதலீடுகள் முற்றிலுமாக அழிந்து விட்டன. அதனால், மகளிர் வாங்கியிருந்த கடன்களுக்கான தவணைகளை குறித்த காலத்தில் அவர்களால் செலுத்த முடியவில்லை.

    இந்த சூழலை புரிந்து கொள்ள முடியாத தனியார் வங்கிகளும், நிதிநிறுவனங்களும் தங்களிடம் பெற்ற கடனுக்கான தவணையை உடனடியாக திருப்பிச் செலுத்தும்படி மிரட்டல் விடுப்பதாக தெரிகிறது.

    மேலும் படிக்க...

    திருநங்கைகள், பழங்குடியின மக்கள், தெருக்கூத்து கலைஞர்கள் உள்ளிட்டோருக்கு 1,000 ரூபாய் வழங்க அரசாணை வெளியீடு

    சில இடங்களில் பொதுத்துறை வங்கிகளும் தொண்டு நிறுவனங்கள் மூலம் நெருக்கடி கொடுக்கின்றன. சில இடங்களில் தனியார் நிதி நிறுவனங்களின் கடன் வசூல் முகவர்கள் மகளிர் சுயஉதவிக் குழுவினரை கண்ணியக் குறைவாக நடத்துவதாக செய்திகள் வெளிவருவது மிகவும் வேதனை அளிக்கிறது..

    எனவே, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடன் தவணை வசூலை அடுத்த 6 மாதங்களுக்கு ஒத்திவைக்கும்படி வங்கிகள், தனியார்துறை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி ஆணையிட வேண்டும். கடன் தவணை ஒத்திவைப்புக்காலத்தில் தவணைத் தொகை மீதான வட்டியையும் ரத்து செய்ய ரிசர்வ் வங்கி ஆணையிட வேண்டும். கிராமப்புறங்களில் தவணை செலுத்தும்படி மிரட்டுவோர் மீது குற்றவழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு அரசு ஆணையிட வேண்டும்” என்று கூறியுள்ளார்.
    Published by:Vaijayanthi S
    First published: