• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • 12th Exam : 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு... எடப்பாடி பழனிச்சாமியிடம் தொலைபேசியில் கருத்து கேட்ட அன்பில் மகேஷ்

12th Exam : 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு... எடப்பாடி பழனிச்சாமியிடம் தொலைபேசியில் கருத்து கேட்ட அன்பில் மகேஷ்

எடப்பாடி பழனிச்சாமி - அன்பில் மகேஷ்

எடப்பாடி பழனிச்சாமி - அன்பில் மகேஷ்

12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமியுடன் தொலைபேசியில் பேசி அவரது கருத்துக்களை கேட்டறிந்தார்.

  • Share this:
தமிழகத்தில் 12ஆம் வகுப்பு தேர்வு தொடர்பாக அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்கள், மருத்துவ நிபுணர்களுடன் இன்று ஆலோசனை நடத்தப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். சென்னை தலைமைச்செயலகத்தில் மாவட்ட கல்வி அதிகாரிகளுடனான ஆலோசனைக்கூட்டம் மற்றும், கல்வியாளர்களுடனான கூட்டம் காணொலி காட்சி மூலம் நேற்று நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து, அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் 12ஆம் வகுப்பு தேர்வு தொடர்பாக அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்கள் அடங்கிய 13 பேர் கொண்ட குழுவுடன் காணொலிக் காட்சி மூலமாக இன்று பகல் 12 மணியில் இருந்து 1 மணிவரை ஆலோசனை மேற்கொள்ளப்படும். மிகக் குறுகிய காலகட்டத்தில் ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட வேண்டியதிருப்பதால் இந்த ஏற்பாட்டை செய்திருக்கிறோம் என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தொடர்ந்து பேசிய அமைச்சர், பிற்பகல் 1 மணி முதல் 1.30 மணி வரைக்கும் மருத்துவ நிபுணர்கள் குழு, மனோதத்துவ நிபுணருடன் ஆலோசனை மேற்கொள்ளப்படும். அவர்களின் கருத்தின் அடிப்படையில் அறிக்கை தயாரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அளிப்போம். மாணவர்களின் எதிர்காலம் சம்பந்தப்பட்டது என்பதால் நாங்கள் உடனடியாக இதில் முடிவை மேற்கொள்ளவில்லை. இந்த பிரச்சினையை முதலமைச்சர் உன்னிப்பாக கவனித்து வருகிறார்.

இதில், அனைவரது கருத்தும் தேவை என்பதால்தான் நான் ஏற்கனவே குறிப்பிட்ட அந்த கூட்டங்களை நடத்தும்படி முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதுமட்டுமின்றி, பிற மாநிலங்கள் என்ன நிலைப்பாட்டை எடுத்துள்ளன என்பது பற்றிய முழுமையான தகவலை பெறவேண்டும். இவ்வளவு நடவடிக்கைகளையும் மேற்கொண்டபிறகுதான் முதலமைச்சர் இறுதி முடிவை எடுப்பார்.

12ஆம் வகுப்பு தேர்வு நடத்தாமல் போனால் உயர் கல்விக்கு மாணவர்கள் எப்படி செல்வார்கள், அங்கு எந்த மதிப்பெண்ணை காட்டுவார்கள் என்ற கேள்விகள் எழுகின்றன. நீட் தேர்வு நடந்தால், அதில் பயிற்சி எடுத்தவர்கள் மட்டும்தான் தப்பிப்பார்களா என்பதையும் பார்க்க வேண்டியதிருக்கிறது. இப்போதைக்கு 12ஆம் வகுப்பு தேர்வை நடத்துவதா, வேண்டாமா என்பதற்கான கருத்து மட்டுமே கேட்கப்பட்டு வருகிறது.

மாணவர்களுக்கு எந்தவித சங்கடமும் வந்துவிடக் கூடாது. சி.பி.எஸ்.இ. தேர்வை ரத்து செய்யும் பிரதமரின் அறிவிப்பு வருவதற்கு முன்பு, தேர்வு நேரடியாக நடத்தப்படும் என்று கூறியிருந்தோம். ஏனென்றால், திடீரென்று தேர்வை அறிவிக்கும்போது மாணவர்களுக்கு அழுத்தம் வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் அவ்வாறு கூறினோம்.

நீட் தேர்வை தமிழகத்துக்குள் நுழைய விடுவதில்லை என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. சட்டமன்றம் கூடும்போது இது குறித்து முதலமைச்சர் நல்ல தீர்வை எடுப்பார். 12ஆம் வகுப்பு தேர்வு விவகாரத்தில் பெற்றோர், மாணவர்களின் கருத்துகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொருவிதமாக உள்ளன. கலவையான கருத்துகள்தான் இதுவரை பெறப்பட்டுள்ளன.

Must Read : ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்க சீரம் நிறுவனத்திற்கு ஒப்புதல்

ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் தயாராக உள்ளன. அதற்கான கமிட்டி போடப்பட்டுள்ளது. அதன் அறிக்கை 7ஆம் தேதியன்று அளிக்கப்படுகிறது. முதலமைச்சரின் ஒப்புதலுக்கு அது அனுப்பப்பட்டு, மாற்றங்கள் இருந்தால் திருத்தப்பட்டு பின்னர் வெளியிடப்படும். தனியார் பள்ளி ஆசிரியர்கள் சிலர், வேலை இழந்திருப்பதாக தெரிகிறது. அதுபோன்ற ஆசிரியர்களை கொரோனா தடுப்பு பணியிலாவது பயன்படுத்துங்கள் என்ற கோரிக்கை பற்றி முதலமைச்சரிடம் தெரிவிப்பதாக கூறியுள்ளேன்” என்று தெரிவித்தார்.

இந்நிலையில், அனைத்து தரப்பினரிடமும் கருத்து கேட்கும் அடிப்படையில், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியிடம் தொலைப்பேசியில் கருத்து கேட்டறிந்தார் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் பரிசீலித்து, 12ஆம் வகுப்பு தேர்வை நடத்துவதா, வேண்டாமா என்பது குறித்து, விரைவில் முறையான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Suresh V
First published: