கோவை ஒரு ரூபாய் இட்லி பாட்டிக்கு சொந்த வீடு வழங்க முன் வந்தது மஹிந்திரா நிறுவனம்

கோவை ஒரு ரூபாய் இட்லி பாட்டிக்கு சொந்த வீடு வழங்க முன் வந்தது மஹிந்திரா நிறுவனம்

1 ரூபாய் இட்லி பாட்டி

கோவையில்  ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி வழங்கி வந்த ‘இட்லி அம்மா’ கமலாத்தாளுக்கு மஹிந்திரா நிறுவனம் சொந்த வீடு வழங்க முன்வந்துள்ளது.

 • Share this:
  கோவை வடிவேலாம்பாளையம் பகுதியை சேர்ந்த கமலாத்தாள் என்ற மூதாட்டி ஒருவர் ஒரு இட்லி, வெரும் ஒரு ரூபாய் என மலிவு விலையில் கடந்த 30 ஆண்டுகளாக வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் மஹிந்திரா குழும தலைவர் ஆனந்த் மஹிந்திரா 2 ஆண்டுகளுக்கு முன்பு ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில் ஏழை எளிய மக்களும் பசியாற வேண்டும் என்பதற்காக கோவையில் விறகு அடுப்பு மூலம் ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி என்று மலிவான விலையில் விற்பனை செய்து வந்த கமலாத்தாள் குறித்து புகழ்ந்திருந்தார்.

  அதோடு மட்டுமல்லாமல் அவருக்கு விறகு அடுப்புக்கு மாற்றாக சமையல் எரிவாயு அடுப்பு வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார். அவருடைய  ட்விட்டர் பதிவு வைரலானதை அடுத்து ‘ஒரு ரூபாய் இட்லி அம்மா’கமலாத்தாள் பரவலாக அறியப்பட்டார். லாப நோக்கமில்லாமல் இதை செய்வதன் மூலம் குறைந்த வருமானம் ஈட்டுபவர்களும் வயிறார சாப்பிட முடியும் என்று கமலாத்தாள் கூறினார்.  இதையடுத்து கோவையில்  உள்ள பாரத் கேஸ் நிறுவனம் கமலாத்தாளுக்கு இலவசமாக எரிவாயு அடுப்பு வழங்கியது. அதன்பிறகும் தொடர்ந்து மலிவான விலையில் உணவு வழங்கி வந்த கமலாத்தாள் சொந்தமான இடத்தில் கொஞ்சம் பெரிய அளவில் இந்த சேவையை வழங்க வேண்டுமென விரும்பினார். தற்போது அந்த விருப்பத்தையும் ஆனந்த் மஹிந்திரா நிறைவேற்ற முன்வந்துள்ளார்.

   

  மஹிந்திரா குழுமத்தின் ரியல் எஸ்டேட் பிரிவான மஹிந்திரா லைஃப்ஸ்பேசஸ் நிறுவனம் கமலாத்தாளுக்குச் சொந்தமாக நிலம் வாங்கி பதிவு செய்ய உதவியிருக்கிறது. மேலும் அந்த நிலத்தில் கமலாத்தாளுக்கான வீடு மற்றும் இட்லி கடை நடத்துவதற்கான கட்டுமானத்தை விரைவில் துவங்க உள்ளதாக இட்லி பாட்டி தெரிவித்தார்.

  செய்தியாளார்: வைரபெருமாள் அழகுராஜன்  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: