மு.க.ஸ்டாலினும், மு.க.அழகிரியும் ஒரு பார்வை!

மு.க.அழகிரி - மு.க.ஸ்டாலின்

ஸ்டாலினிடம், அழகிரி என்று கேட்கப்பட, ‘என் அண்ணன்’ என்று உடனடியாகப் பதில் சொன்னார். இப்படி, ஸ்டாலின், அழகிரியைத் தன் அண்ணன் என்று அழைத்தது இருவரது இடையேயான உறவில் நல்ல மாற்றம் என்று கூறப்பட்டது.

 • Share this:
  தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமானவர் மு.க.அழகிரி. கருணாநிதியின் குடும்பத்திலிருந்து அதிரடியாக திமுகவுக்கு எதிராகவும், அந்தக் கட்சியின் தலைவர் ஸ்டாலினுக்கு எதிராகவும் விமர்சனங்களை முன்வைப்பதாலேயே, அரசியல் அரங்கில் இவரின் கருத்துகள் முக்கிய கவனம் பெற்று வந்தன.

  திமுகவில் ஒரு காலத்தில் முக்கிய புள்ளியாக இருந்து வந்த அழகிரி, கடந்த 2014-ம் ஆண்டு, திமுகவுக்கு எதிராகச் செயல்பட்டதாக கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். தொடர்ந்து, ஸ்டாலினை விமர்சித்து வந்ததாலே அழகிரி கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக அப்போது, கூறப்பட்டது. கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பின்னரும், திமுகவுக்கு எதிராகவும், ஸ்டாலினுக்கு எதிராகவும் மிகக் காட்டமாக கருத்துகளைத் தெரிவித்துவந்த அழகிரி, கருணாநிதியின் மறைவுக்குப் பிறகும், பாஜகவில் இணையப்போவதாகவும், புதிய கட்சியைத் தொடங்கப்போவதாகவும் செய்திகள் வெளிவந்தனன.

  மு.க.ஸ்டாலின் - மு.க.அழகிரி மோதல் என்பது கிட்டதட்ட 20 ஆண்டுகளுக்கு முன்பாக தொடங்கியது. 1993ம் ஆண்டு தி.மு.க.விலிருந்து முக்கிய நிர்வாகிகளுடன் வைகோ பிரிந்து சென்றபோது, தென்மாவட்டங்களில் அழகிரியின் ஆதிக்கம் பரவத்துவங்கியது. அப்போது, அழகிரியின் தலையீட்டின் காரணமாகவே நிர்வாகிகள் பிரிந்து சென்றதாக ஸ்டாலின் ஆதரவாளர்கள் கூறிவந்தனர்.

  இதனிடையே, அப்போது மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தல் நடந்தது. அந்த சமயம் அழகிரியும், ஸ்டாலினும் தனது ஆதரவாளர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என தலைமையிடம் கோரியுள்ளனர். ஆனால், அப்போது, ஸ்டாலின் தரப்புக்கே வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதனால், கோபமடைந்த அழகிரி திமுக முப்பெரும் விழாவில் தனது ஆதரவாளர்கள் யாரும் கலந்துகொள்ள கூடாது என கூறினார். இதனால், அப்போதே, மு.க.அழகிரி தற்காலிகமாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த சம்பவத்தில் இருந்து துவங்கியதே இருவருக்கும் இடையேயான மோதல் போக்கு.

  இதைத்தொடர்ந்து, 2001ம் ஆண்டில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு எதிராக 12 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தினார். இதேபோல், உள்ளாட்சி தேர்தலிலும் தனது ஆதரவாளர்களை திமுகவுக்கு எதிராக செயல்பட வைத்தார். இதைத்தொடர்ந்து, 2003ம் ஆண்டு மு.க.ஸ்டாலினின் ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் மு.க.அழகிரி உட்பட 13பேர் கைது செய்யப்பட்டனர்.

  இதன் பின்னர் உச்ச கட்டத்திற்கு சென்றது மோதல், 2007ம் ஆண்டு ஸ்டாலினுக்கு ஆதரவாக தினகரன் நாளிதழில் வெளியான கருத்துகணிப்புக்கு எதிராக, அழகிரி ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வன்முறையில் தினகரன் அலுவலகத்திற்கு தீவைக்கப்பட்டதால் 3 பேர் உயிரிழந்தனர். இப்படி இருவருக்கமான கோஷ்டி மோதல் அப்போதிருந்து இன்னும் கூடுதலாக பெரும் பூகம்பமாக வெடிக்க துவங்கியது.

  இதன்பின்னர், 2009 நாடாளுமன்ற தேர்தலில் அழகிரி போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, அழகிரி தேர்தலில் வென்று மத்திய அமைச்சரவையிலும் இடம் பிடித்தார். அந்த சமயத்தில் ஸ்டாலினை திமுக தலைவராக்க கருணாநிதி முடிவு செய்திருந்தார். எனினும், அதனை அறிவிக்கவிடாமல் மு.க.அழகிரி பார்த்துக்கொண்டார். இதன்பின்னர் அடுத்த முதல்வராக ஸ்டாலினை முன்மொழிய உள்ளதாக கருணாநிதி அறிவித்தார். இதனால், கட்சியில் அழகிரிக்கு நெருக்கடி ஏற்பட்டது. தொடர்ந்து, பதவிக்காலம் முடிந்ததால், மத்திய அமைச்சரவையில் இருந்து வெளியேறினார் அழகிரி. இதன் பின்னர் மீண்டும் திமுகவையும், ஸ்டாலினையும் விமர்சிக்கத் தொடங்கினார். இதன் பின்னரே 2014ல் அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

  தொடர்ந்து, நான்கு வருடத்திற்கு பிறகு கருணாநிதி மறைந்த சில நாட்களில், கருணாநிதியின் ஆதரவாளர்கள் தன் பக்கம் இருபத்தாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இதைத்தொடர்ந்து, அழகிரி பாஜகவில் இணைவார், ரஜினி கட்சி தொடங்கினால் அவருடன் இணைவார் என்று பரவலாக பேசப்பட்டு வந்து. இதனிடையே, அழகிரி கடந்த ஜனவரி மாதம் மதுரை பாண்டிகோயில் அருகே தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, ``ஸ்டாலின் ஒருபோதும் முதல்வராக முடியாது'' என அவர் கருத்து கூறியது அப்போது அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

  எனினும், அந்தக் கூட்டத்துக்குப் பின்னர் அழகிரி திமுகவுக்கு எதிராக எந்த விமர்சமும் வைக்கவில்லை. அழகிரியின் அந்த அமைதிக்கு ஸ்டாலினின் பேச்சே காரணம் என்று கூறப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் தனியார் தொலைக்காட்சி நேர்காணலில் கலந்துகொண்ட ஸ்டாலினிடம் பிரபலங்கள் குறித்து ஒரு வார்த்தையில் பதில் கேட்கப்பட்டது. ஜெயலலிதா, சசிகலா, ராகுல் காந்தி ஆகியோர் பற்றியெல்லாம் பதில் சொன்ன ஸ்டாலினிடம், அழகிரி என்று கேட்கப்பட, ‘என் அண்ணன்’ என்று உடனடியாகப் பதில் சொன்னார்.

  இப்படி, ஸ்டாலின், அழகிரியைத் தன் அண்ணன் என்று அழைத்தது இருவரது இடையேயான உறவில் நல்ல மாற்றம் என்று கூறப்பட்டது. எனினும், இதற்கிடையே குடும்பத்தினர் பலரும் அழகிரியை சமாதானம் செய்துள்ளதாகவும், இதன் பலனாகவே அழகிரி அமைதி காப்பதாகவும் கூறப்படுகிறது.

  இந்நிலையில், நாளை முதல்வராக பதவியேற்க உள்ள மு.க.ஸ்டாலினுக்கு, பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் அவரது சகோதரர் மு.க.அழகிரி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மு.க.அழகிரி தனது முகநூல் பதிவில் கூறியதாவது, “முதலமைச்சராக பதவி ஏற்கும் என் தம்பி மு.க.ஸ்டாலினுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். என் தம்பி பதவியேற்பதில் பெருமை அடைகிறேன்” என்று தெரிவித்துள்ளார். மு.க.அழகிரியின் இந்த பதிவு திமுகவினர் மத்தியில் பெரும் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

  தொடர்ந்து, அழகிரி மீண்டும் கட்சிக்குள் சேர்த்துக்கொள்ளப்படுவாரா? மு.க.ஸ்டாலின் அவரை ஏற்றுக்கொள்வாரா என்று ஆதரவாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.
  Published by:Esakki Raja
  First published: