நண்பரின் வீட்டை ரூ.40 லட்சத்திற்கு மோசடியாக விற்ற வங்கி ஊழியர்... மதுரையில் அதிர்ச்சி!

நண்பரின் வீட்டை ரூ.40 லட்சத்திற்கு மோசடியாக விற்ற வங்கி ஊழியர்... மதுரையில் அதிர்ச்சி!
மோசடியில் ஈடுபட்ட பால்பாட்டி மற்றும் சாகுல் அமீதின் இடிக்கப்பட்ட வீடு
  • News18
  • Last Updated: December 3, 2019, 4:46 PM IST
  • Share this:
மதுரையில் நண்பரின் வீட்டை, மோசடியாக வேறொருவருக்கு விற்று 40 லட்ச ரூபாயை மோசடி செய்துள்ளார் இந்தியன் வங்கி ஊழியர் ஒருவர்.

மதுரை முல்லை நகர் பகுதியைச் சேர்ந்த சாகுல் ஹமீது, தனியார் நிறுவன காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

இவருக்கு தவுலத் பானு என்ற மனைவியும் அப்துல் ஆரிப் என்ற ஒரு மகனும் உள்ளனர். இரண்டாண்டிற்கு முன்னர் மகன் அப்துல் ஆரிப் காதல் திருமணத்தில் பிரச்னை ஏற்பட்டுள்ளது.


இதனால் சொந்த ஊரில் இருக்க முடியாமல் மனைவி, மகனோடு சென்னைக்கு குடிபெயர்ந்தார் சாகுல் ஹமீது.

அப்போது அவருக்கு ஏற்பட்ட திடீர் பணத்தேவையை பூர்த்தி செய்ய, இந்தியன் வங்கியில் கோல்டு அப்ரைசராக பணியாற்றி வரும் தனது நண்பர் பால்பாண்டியை சாகுல் ஹமீது அணுகியுள்ளார்.

அவர் முதலில் 50 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்து உதவியுள்ளார். மீண்டும் பணத்தேவை ஏற்பட்டதால் இரண்டு தவணையாக 75 ஆயிரம் ரூபாய் என மொத்தமாக ஒன்றேகால் லட்சம் ரூபாய் கொடுத்து உதவியுள்ளார்.இந்நிலையில், தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும் அதற்காக அறுவை சிகிச்சை செய்ய 9 லட்ச ரூபாய் பணம் தேவைப்படுவதாக சாகுல் ஹமீதிடம் பால்பாண்டி கூறியுள்ளார்.

வீட்டு பத்திரத்தை கொடுத்து உதவினால், அடமானம் வைத்துவிட்டு பணம் பெற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள உதவியாக இருக்கும் என்றும், ஓராண்டுக்குள் பத்திரத்தை திருப்பித் தருவதாக சாகுல் ஹமீதிடம் பால்பாண்டி கூறியுள்ளார்.

ஆபத்து சமயத்தில் தனக்கு உதவிய நண்பர், உடல்நிலை பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சைக்காக பணம் கேட்கிறாரே என நினைத்து, தனது வீட்டு பத்திரத்தை பால்பாண்டிக்கு பவர் எழுதி கொடுத்துள்ளார் சாகுல் ஹமீது.

இந்நிலையில், தனது மகனின் திருமண பிரச்னை முடிந்து சாகுல் ஹமீது சில மாதங்களுக்கு முன்னர் குடும்பத்தோடு மதுரை திரும்பியுள்ளார்.

அப்போது, அவரை சந்தித்த பால்பாண்டி, இன்னும் பிரச்னை முடியவில்லை என்றும் அதனால் சென்னைக்கே திரும்பி செல்லுமாறும் கூறியுள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த சாகுல் ஹமீதின் மகன் அப்துல் ஆரிப், அக்கம்பக்கம் விசாரித்துள்ளார். அப்போது, தங்கள் வீட்டை நிமலன் என்பவருக்கு பால்பாண்டி விற்றது தெரியவந்துள்ளது.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அப்துல் ஆரிப், பால் பாண்டியிடம் சென்று கேட்டுள்ளார். வீட்டை வேண்டாம் என்று கூறி 40 லட்ச ரூபாய்க்கு உங்கள் தந்தை விற்றுவிட்டதாக அப்துல் ஆரிப்பிடம் பால்பாண்டி கூறியுள்ளார்.

இது குறித்து தந்தையிடம் அப்துல் ஆரிப் கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சாகுல் ஹமீது, பால்பாண்டியிடம் தனது வீடு குறித்து கேட்டுள்ளார். வீட்டை விற்றுவிட்டதாகவும், உங்களால் முடிந்ததை பார்த்துக்கொள்ளுங்கள் என பால்பாண்டி மிரட்டியதாக தெரிகிறது.

இதை அடுத்து பவர் எழுதி கொடுத்ததை மோசடியாக பயன்படுத்தி, தனது வீட்டை விற்றுவிட்டதாக மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், பால்பாண்டி மீது சாகுல் அமீது புகார் கொடுத்தார்.

புகாரை பெற்றுக்கொண்டு போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் ஒரு முறை மட்டுமே ஆஜரான பால்பாண்டி அதன் பின்னர் விசாரணைக்கு வராமல் இழுத்தடித்துள்ளார்.

இதை அடுத்து, சாகுல் ஹமீது தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு திங்கட்கிழமை விசாரணைக்கு வந்த நிலையில் சாகுல் ஹமீது குடும்பத்தினர் நீதிமன்றம் சென்றனர்.

அந்நேரம் பால்பாண்டி மற்றும் நிமலன் ஆகியோரின் வழக்கறிஞர்கள் எனக்கூறி சென்ற சிலர், ஜேசிபி எந்திரம் மூலம், சாகுல் ஹமீது வீட்டை இடித்துள்ளனர்.

வாடகைக்கு வீட்டில் குடியிருந்தவர்கள் கொடுத்த தகவல்படி சாகுல் ஹமீது குடும்பத்தினர் வீட்டிற்கு சென்று பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து தல்லாகுளம் காவல்நிலையித்தில் சாகுல் ஹமீது குடும்பத்தினர் புகார் கொடுத்தனர். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாகுல் ஹமீதின் குற்றச்சாட்டு குறித்து, பால்பாண்டியிடம் தொலைபேசி மூலம் விளக்கம் கேட்க முயற்சித்தபோது, இது குறித்து விளக்கமளிக்க முடியாது எனக்கூறி இணைப்பை துண்டித்துவிட்டார்.

அறுவை சிகிச்சை செய்ய பணத்தேவை ஏற்பட்டபோது, தனது வீட்டு பத்திரத்தை கொடுத்து உதவிய நண்பரின் வீட்டை மோசடியாக விற்றதுடன் அந்த வீட்டையும் ஒரு வங்கி ஊழியர் இடித்த சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Also see...
First published: December 3, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading