அல்வா கொடுத்து வாக்கு கேட்கும் சுயேட்சை வேட்பாளர்: மதுரை வடக்கு தொகுதியில் நூதன பிரச்சாரம்!

அல்வா கொடுத்து வாக்கு கேட்கும் சுயேட்சை வேட்பாளர்: மதுரை வடக்கு தொகுதியில் நூதன பிரச்சாரம்!

அல்வா கொடுத்து வாக்கு கேட்கும் சுயேட்சை வேட்பாளர்

வாக்கு சேகரிக்க செல்கையில் வாக்காளர்களுக்கு துண்டு பிரசுரத்துடன் சேர்த்து ஒரு சிறிய அல்வா பாக்கெட்டையும், ஒரு துணி முக கவசத்தையும் கொடுத்து வித்தியாசமாக பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
மதுரையில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் ஊழல்வாதிகளுக்கு தேர்தலில் அல்வா கொடுங்கள் என வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

மதுரை தெற்கு தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் துலாம் சரவணன் என்பவர் ஏற்கனவே, விந்தையான தேர்தல் அறிக்கையை கொடுத்து அரசியல் கட்சியினரை அதிர வைத்தார். அந்த வரிசையில் மதுரையில் மற்றுமொரு சுயேட்சை வேட்பாளர் வினோத பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் கோ.தளபதி, அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் டாக்டர் சரவணன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இவர்களை எதிர்த்து சங்கரபாண்டி என்பவர் சுயேட்சையாக போட்டியிடுகிறார்.

ஏழ்மையான நெசவாளர் குடும்பத்தில் பிறந்த சங்கரபாண்டி, டைல்ஸ் பதிக்கும் பணி செய்து வருகிறார். தொகுதியில் சில சமூக சேவைகளில் ஈடுபட்டு வந்த இவர், இப்போது சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிடுகிறார்.

இவர் தற்போது வாக்கு சேகரிக்க செல்கையில் வாக்காளர்களுக்கு துண்டு பிரசுரத்துடன் சேர்த்து ஒரு சிறிய அல்வா பாக்கெட்டையும், ஒரு துணி முக கவசத்தையும் கொடுத்து வித்தியாசமாக பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார்.

இதற்கான காரணம் என்ன என அவரிடம் கேட்டோம்...
"தேர்தல் நேரத்தில் பலஅரசியல்வாதிகள் போலியான வாக்குறுதிகளை தெரிவித்து மக்களை ஏமாற்றி கொண்டிருக்கிறார்கள்.தமிழக அரசின் கடன் சுமை 5 லட்சம் கோடிக்கு மேல் ஏறிக்கொண்டு இருக்கும் நிலையில இலவச திட்டங்களால் அந்த சுமை மேலும் அதிகரிக்கவே செய்யும்.

எனவே, வாக்கு கேட்டு வரும் அரசியல் வாதிகளில் நல்லவர், கெட்டவர் யார் என்று கண்டுபிடித்து வாக்காளர்கள் அவர்களுக்கு அல்வா கொடுக்க வேண்டும்,  ஊழல் செய்த வேட்பாளர்களுக்கு ஏமாற்றத்தை மக்கள் அளிக்க வேண்டும்.அது பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அல்வா கொடுத்து பிரச்சாரம் செய்து வருகிறோம்" என்றார்.

Also read... 20 மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வழக்கத்தை விட வெயில் சுட்டெரிக்கும் - சென்னை வானிலை மையம் எச்சரிக்கை

மேலும் பேசியவர், "தேர்தல் நேரத்தில் கொரோனா பாதிப்பும் தீவிரமாகி கொண்டிருக்கிறது. எனவே, மக்கள் தவறாமல் முக கவசம் அணிய வேண்டும் என்பதையும் வலியுறுத்தி பிரச்சாரத்தின் போது முக கவசம் அளித்து வருகிறோம்" என்றவர்"எளிய மக்களும் அரசியல் அதிகாரத்திற்கு வர வேண்டும், என்பதை இளைஞர்களுக்கு உணர்த்தும் விதமாக தேர்தலில் போட்டியிட்டு உள்ளேன். நான் வெற்றி, தோல்வியை பற்றி கவலைப்படவில்லை. ஓட்டுக்கு பணம் கொடுக்கும் வேட்பாளரை தோற்கடிக்க வேண்டும் என்பதே நோக்கம்" என்றார்.

அரசியலுக்கும் மதுரைக்கும் ஒரு நீண்ட பந்தம் இருக்கும் நிலையில், வாக்காளர்களுக்கு அரசியல் குறித்தும், ஊழல் வேட்பாளர்கள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இயங்கும் இவர் வெற்றி பெறாவிட்டாலும், இவருடைய நோக்கம் வெற்றி பெற வேண்டும் என்பதே அரசியல் ஆர்வலர்களின் எண்ணமாக உள்ளது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: