lockdown : தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? இன்று அறிவிப்பு வெளியாகும் என தகவல்

ஊரடங்கு கட்டுப்பாடு

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்துவரும் நிலையில், ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பது குறித்து தமிழக அரசு இன்று அறிவிப்பு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • Share this:
தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், தளர்வில்லா முழுஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இது நாளை மறுதினத்துடன் (7ஆம் தேதி) முடிவுக்கு வருகிறது.

ஊரடங்கு காரணமாக, கொரோனா பரவல் படிப்படியாக குறைந்துவரும் நிலையில், ஊரடங்கை நீட்டிக்கலாமா அல்லது தளர்வுகளை அறிவிக்கலாமா என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார்.

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர், பொதுத்துறை, மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர்கள், காவல் துறை தலைவர், மருத்துவ நிபுணர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அப்போது, கொரோனா பரவலை முற்றிலும் கட்டுப்படுத்தும் வகையில், ஊரடங்கை தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிக்க மருத்துவத் துறையினர் பரிந்துரை செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோவை, ஈரோடு, திருப்பூர், நாகை, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் தொற்று பரவல் மிக தீவிரமாக உள்ளது. இதனால், இந்த மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் என்றும், மற்ற மாவட்டங்களில் அத்தியாவசியப் பணிகளுக்கு சில தளர்வுகளை அளிக்கலாம் என்றும் பரிந்துரைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து முறையான அறிவிப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் முதலமைச்சர் தலைமையிலான வல்லுநர் குழுவுக்கு உதவுவதற்காக 13 உறுப்பினர்களைக் கொண்ட பணிக் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி பூர்ணலிங்கம் தலைமையிலான இந்தக் குழுவில், குகநாதன், குழந்தைசாமி, சென்னையில் உள்ள தேசிய தொற்று நோய் மைய இயக்குநர் மனோஜ் முர்ஹேகர், வேலூர் சிஎம்சி-யைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் முலியில் ஆகிய மருத்துவ நிபுணர்கள் இடம்பெற்றுள்ளனர்.

மேலும், மருத்துவத் துறை முதன்மைச் செயலாளர், மருத்துவத் துறை சிறப்புப் பணி அதிகாரி உள்ளிட்ட 9 அதிகாரிகளும் இடம்பெற்றுள்ளனர். இந்தக் குழு அடிக்கடி ஆலோசனை நடத்தி, தேவையான ஆலோசனைகளை வழங்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று தமிழகத்தில், கடந்த ஒரு வார காலமாக மெதுவாக குறைந்துவருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் கடந்த 2 வார காலமாக தளர்வுகளற்ற முழு ஊரடங்கு பிறக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் தற்போது நாளுக்கு நாள் குறைந்துவருவதால் தளர்வுகள் வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில், கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘தமிழகத்தில் ஒரேநாளில் 1,63,818 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், 24 மணி நேரத்தில் 22,651 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த பாதிப்பு 21,95,402 பேராக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு குணமடைந்து ஒரே நாளில் 33,646 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

Must Read : 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு... எடப்பாடி பழனிச்சாமியிடம் தொலைபேசியில் கருத்து கேட்ட அன்பில் மகேஷ்

கொரோனா பாதிப்பால் நேற்று மட்டும் 463 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்மூலம் மொத்த உயிரிழப்பு 26,128 பேராக அதிகரித்துள்ளது. கோயம்புத்தூரில் 2,810 பேருக்கும், சென்னையில் 1,971 பேருக்கும், ஈரோட்டில் 1,619 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Suresh V
First published: