Home /News /tamil-nadu /

கோடைகால குடிநீர் பற்றாக்குறையை போக்க ரூ.158 கோடி நிதி ஒதுக்கீடு!

கோடைகால குடிநீர் பற்றாக்குறையை போக்க ரூ.158 கோடி நிதி ஒதுக்கீடு!

கோப்புப் படம்

கோப்புப் படம்

சென்னைக்கான குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ஆந்திர மாநிலத்தில் இருந்து கிருஷ்ணா நதிநீரை பெறுவதற்கான நடவடிக்கைகளில், பொதுப்பணித்துறையோடு உள்ளாட்சித்துறையும் இணைந்து செயல்படுவதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.

  • News18
  • Last Updated :
    தமிழகத்தில் கோடைகால குடிநீர் பற்றாக்குறையை போக்க 158 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னையின் குடிநீர் தேவைகளை கருத்தில் கொண்டு, பூண்டி, செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகளை தூர்வாரவும் தமிழக அரசு நிதி ஒதுக்கியுள்ளது.

    பருவமழை பொய்த்துப் போனதால் சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும், சோழவரம், புழல், பூண்டி, செம்பரம்பாக்கம் ஏரிகளில் தண்ணீர் வற்றத் தொடங்கிவிட்டன.

    இந்த 4 ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11 ஆயிரம் கன அடி. ஆனால், பராமரிப்பு மற்றும் தூர்வாரப்படாத காரணத்தினால், மழைக் காலங்களில் கிடைக்கும் தண்ணீரை 30 முதல் 40 சதவீதம் வரை சேமிக்க முடியாத நிலை உள்ளது.

    தற்போது இருக்கும் நீரை கொண்டு, மார்ச் மாதம் வரை மட்டுமே சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும். இதனை கருத்தில் கொண்டு 4 ஏரிகளையும் தூர்வார நிதி ஒதுக்கி, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

    அதன்படி, செம்பரம்பாக்கம் ஏரியை தூர்வார 4 கோடி ரூபாயும், பூண்டி ஏரியை தூர்வார 10.98 கோடி ரூபாயும், செங்குன்றம் ஏரியை தூர்வார 9 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கி, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே சோழவரம் ஏரியை தூர்வார, கடந்த ஆகஸ்ட் மாதமே நிதி ஒதுக்கி, அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

    ஏரிகளிலும் நீர்வரத்து கால்வாய்களை சரிசெய்வது, ஏரி கரைகளை பலப்படுத்துவது, ஷட்டர் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வது என பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. நடப்பு மாதத்திலேயே இதற்கான டெண்டர் விடப்பட்டு, அடுத்த மாதம் முதல் வாரத்தில் ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு, பணிகள் தொடங்க உள்ளன. வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே இதற்கான பணிகளை முடிக்க அரசு திட்டமிட்டுள்ளது.

    ஏரிகளை தூர்வாரும்போது கிடைக்கும் வண்டல் மண், செம்மண் மற்றும் சவ்வுடு மண்ணை விற்பனை செய்வதன் மூலம், 700 கோடி ரூபாய் வரை வருவாய் கிடைக்கும் என பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.

    இதனிடையே, சென்னைக்கான குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ஆந்திர மாநிலத்தில் இருந்து கிருஷ்ணா நதிநீரை பெறுவதற்கான நடவடிக்கைகளில், பொதுப்பணித்துறையோடு உள்ளாட்சித்துறையும் இணைந்து செயல்படுவதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.

    சென்னை மட்டுமின்றி, மாநிலத்தில் பரவலாக இந்தாண்டு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதால், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில், குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க 158 கோடி ரூபாய் நிதி ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. சென்னை குடிநீர் வாரியத்திற்கு 122 கோடி ரூபாயும், கிராமப் புறங்களில் குடிநீர் பிரச்னையை சமாளிக்க 36 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.

    Also see...

    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Drinking water

    அடுத்த செய்தி