திருவள்ளூரில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகனுக்கு சொந்தமான மண்டபத்தில் நிகழ்ந்த விபத்தில், பதினொன்றாம் வகுப்பு மாணவர் உயிரிழந்தார்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பத்தில் அதிமுக முன்னாள் அமைச்சரின் மகள் ஜெய் பிரியா - மருமகன் நவீனுக்கு சொந்தமான மீன் வலை உற்பத்தி தொழிற்சாலை (JFN) பல வருடங்களாக இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலைக்கு அருகாமையில் லிப்ட் வசதி உள்ளிட்ட நவீன வசதிகளுடன் கூடிய வகையில் ஜெ.எஃப் .என் திருமண மண்டபம் கட்டப்பட்டது.
கடந்த ஆண்டு நடைபெற்ற திருமண மண்டப துவக்க விழாவில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி துவக்கி வைத்த பின்னர் அந்த மண்டபத்தில் தொடர்ந்து சுப நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் திருமண மண்டபத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியின் போது உணவு பரிமாறும் வேலைக்காக வந்த காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தைச் சேர்ந்த பதினோராம் வகுப்பு அரசு பள்ளி மாணவன் சீத்தல் 19, திருவண்ணாமலையைச் சேர்ந்த ஜெயராமன் 23, விக்னேஷ் 21 ஆகியோர் லிப்டில் இரண்டாவது மாடிக்கு பெரிய பாத்திரத்தில்( DRUM) உணவுடன் பயணம் செய்துள்ளனர்.
அப்போது லிப்டின் இரும்பு ரோப் பாரம் தாங்காமல் அறுந்து கீழே விழுந்ததில் மாணவன் சீத்தல் 19 தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரோடு லிப்டில் பயணம் செய்த திருவண்ணாமலையைச் ஜெயராமன் 23, விக்னேஷ் 21 ஆகியோர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின்பு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
தலை நசுங்கி உயிரிழந்த மாணவன் சீத்தல் உடல் பொன்னேரி அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது. பிளஸ் 1 தேர்வு நடைபெற்று வரும் சூழலில் குடும்ப வறுமை காரணமாக வேலைக்கு வந்த இடத்தில் மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also read... அரசு வேலை வாங்கி தருவதாக ரூ. 47 லட்சம் மோசடி செய்த மதுரை தம்பதி கைது..
லிப்ட் அருந்து விபத்துக்கு உள்ளான திருமண மண்டபத்தில் கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில் முதல் கட்ட விசாரணையில் லிப்ட் உபகரணங்கள் அனைத்தும் சீனா நாட்டு தயாரிப்பு என தெரியவந்துள்ளது.
இந்த விபத்து குறித்து தனியார் திருமண மண்டப மேலாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு இதே போன்று மீஞ்சூர் தனியார் திருமண மண்டபத்தில் கர்ப்பிணிப் பெண் உள்ளிட்ட ஐந்துபேர் லிப்ட் கம்பி அறுந்து படுகாயம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.
-செய்தியாளர்: பார்த்தசாரதி. இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.