கோவையில் நடந்த திமுக கூட்டம் உள் அரங்கில் நடைபெற்றது. ஆனால் அமமுக வெளி இடங்களில் கூட்டம் நடத்த அனுமதி கேட்டார்கள், அதனால் தான் அனுமதி கிடைக்க வில்லை என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த விளக்கத்திற்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “
கோவையில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற கூட்டத்தில் கொரோனா விதிமுறைகள் மீறப்படவில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கமளித்திருக்கிறார். கொடிசியா உள்அரங்கில் தி.மு.க நிகழ்ச்சி நடத்தியதாக அவர் கூறுவது முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பது போல் உள்ளது.
25,000 பேர் கலந்துகொண்டதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ள அந்த நிகழ்ச்சியின் புகைப்படங்களையோ காணொளிகளையோ பார்க்கும் பச்சைக் குழந்தைக்குக் கூட இந்த நிகழ்ச்சி உள்அரங்கில் நடந்ததா? அல்லது மைதானத்தில் நடந்ததா? என்பது புரியும். அதில் குறைந்தபட்சம் எத்தனை பேர் முகக்கவசம் அணிந்திருக்கிறார்கள்? சமூக இடைவெளியுடன் அமர்ந்திருக்கிறார்கள்?
ஓமைக்ரான் பரவல் தமிழகத்தில் அதிகரித்து வருவதால் மத்திய அரசின் குழுவும் தமிழகத்திற்கு வந்துள்ள இந்த வேளையில் தி.மு.க பாக முகவர்களை ஆலோசனை கூட்டம் என்ற பெயரில் ஒன்று திரட்ட வேண்டிய அவசியம் என்ன? தங்களது சொந்தக் கட்சியினருக்கும் அவர்கள் வழியாக பொதுமக்களுக்கும் நோய்ப் பரவலை ஏற்படுத்த கட்டுப்பாடுகளை விதிக்கும் இவர்களே காரணமாக இருக்கலாமா?
இதையும் படிங்க: எம்ஜிஆர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த அனுமதி மறுப்பு ஏன்: டிடிவி தினகரன் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் பதில்
ஓமிக்ரான் பரவல் அதிகரிப்பதைக் காட்டி புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் நாங்கள் அஞ்சலி செலுத்த காவல்துறை தடைவிதித்த போது, சமூக பொறுப்புமிக்க ஓர் அரசியல் இயக்கமாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் அதனையேற்று செயல்பட்டது. ஆனால், கோவை நிகழ்ச்சிக்கு தி.மு.க.வினருக்கு காவல்துறை முறைப்படி அனுமதி வழங்கினார்களா? அப்படி காவல்துறை பாரபட்சத்துடன் அனுமதி கொடுத்திருந்தால், இனி வரும் காலங்களில் மக்கள் நலப் பிரச்னைகளுக்காக உரிய கொரோனா பரவல் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளோடு நாங்கள் போராட்டம் நடத்தும் போது காவல்துறையினர் அனுமதி தர மறுத்தால் கோவை நிகழ்ச்சியை ஆதாரமாக காட்டி நாங்கள் நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டியிருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: எதிர்க்கட்சி கூட்டங்களில் மட்டும்தான் ஓமைக்ரான் பரவுமா: டிடிவி தினகரன்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.