முதல் முறையாக களம் இறங்கிய அமமுக 87 வார்டுகளில் வெற்றி!

டிடிவி தினகரன்

 • Share this:
  உள்ளாட்சித் தேர்தலில் முதல் முறையாக களம் இறங்கிய அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சற்றும் எதிர்பாராத வகையில் 87 ஊராட்சி ஒன்றிய வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது.

  18 எம்எல்ஏ-க்கள் வழக்கில் ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் அணி வென்ற பிறகு அமமுக-வில் இருந்த முக்கிய பிரமுகர்கள் வெளியேறினர். முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் தங்கதமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் கட்சியில் இல்லாத நிலையில் உள்ளாட்சித் தேர்தலை டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக எதிர்கொண்டது. உள்ளாட்சித் தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் தனித்து போட்டியிட்டது.

  நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 22 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அமமுக படுதோல்வியடைந்தது. அதனால் தொண்டர்கள் உற்சாகமின்றி உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொண்டனர். மேலும் தேர்தல் பிரசாரத்துக்கு டிடிவி தினகரனை விட்டால் அறிமுகமான தலைவர்கள் வேறு எவரும் இல்லை.

  இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் தமிழகம் முழுவதும் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களில் 87 இடங்களில் அமமுக வெற்றி பெற்றுள்ளது. மேலும் அக்கட்சியின் ஆதரவைப் பெற்ற 8 பேர் வென்றிருப்பதாகவும் அக்கட்சி தெரிவித்துள்ளது.

  அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டத்தில் 16 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் அமமுக வெற்றி பெற்றுள்ளது. மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் கயத்தாறு ஒன்றியத்தில் உள்ள 16 இடங்களில் 10-ல் அமமுக வெற்றி பெற்று கயத்தாறு ஒன்றியத்தை முழுவதுமாக கைப்பற்றியுள்ளது.

  தஞ்சை, திருவண்ணாமலை, மதுரை போன்ற இடங்களிலும் ஊராட்சி வார்டுகளில் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றுள்ளது. பலம் வாய்ந்த இரு பெரும் திராவிடக் கட்சிகளுக்கு மத்தியில் எக்கட்சி கூட்டணியும் இன்றி கயத்தாறு ஒன்றியத்தை முழுவதுமாக கைப்பற்றியிருப்பது தொண்டர்களுக்கு மகிழ்ச்சியளித்துள்ளது.
  Published by:Yuvaraj V
  First published: