வாக்காளர் பட்டியலில் இருந்து சசிகலா பெயர் நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து தபால் வாக்கு செலுத்த அனுமதி வழங்க வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஆயிரம் விளக்கு தொகுதி வேட்பாளர் ஆவின் வைத்தியநாதன் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவை சந்தித்து கோரிக்கை வைத்தார். சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா 2017-ல் சிறை சென்ற பிறகு போயஸ் தோட்ட இல்லம் அரசுடமையாக்கப்பட்டது. சசிகலாவின் முகவரி போயஸ் தோட்ட வேதா நிலையத்தில் இருந்ததால் அங்கே வாக்காளர்களாக இருந்த சசிகலா, அவரது உறவினர் இளவரசி உட்பட 19 பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறது.
ஜெயலலிதா மரணத்தின் காரணமாக அவரது பெயர் நீக்கப்பட்டு இருந்த தருணத்தில் தற்போது சசிகலாவின் பெயரும் நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஆயிரம் விளக்கு தொகுதி வேட்பாளர் ஆவின் வைத்தியநாதன் தலைமை தேர்தல் அதிகாரியிடம் இது தொடர்பாக புகார் அளித்தார்.
இதுகுறித்து உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஏற்கனவே சசிகலாவின் வழக்கறிஞர் இதுகுறித்து இரு வாரங்களுக்கு முன்பாகவே தலைமைத் தேர்தல் அதிகாரியை சந்தித்து முறையிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் சசிகலாவுக்கு தபால் வாக்கு இந்தத் தேர்தலில் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஒரு நாட்டின் குடிமகனின் முக்கிய அடையாளம் வாக்களிக்கும் உரிமை என்பதால் தேர்தல் ஆணையம் இதில் நிச்சயம் நல்ல முடிவு எடுக்கும் என்று நம்பிக்கை இருப்பதாக வைத்தியநாதன் தெரிவித்தார்