திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தாலுகாவில் உள்ள குந்தடம் பஞ்சாயத்து யூனியனில் அம்மா சிமெண்ட் வினியோக திட்டத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை விசாரிக்க உத்தரவிடக் கோரி பா.ஜ. நிர்வாகியும், கொலுமங்குழி பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் யோகேஸ்வரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், அம்மா சிமெண்ட் கிடங்கில் ஆவணங்களின் படி இருக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை விட குறைவான எண்ணிக்கையில் இருப்பதாக புகார் அளித்ததாகவும், அதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக தணிக்கை பிரிவு உதவி இயக்குனர் ஆய்வில் இது உறுதி செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த ஆய்வுக்கு பின், பயனாளிகள் பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்து சிமெண்ட் மூட்டைகளுக்கான தொகையை தனியார் ஒப்பந்ததாரர் நிறுவனம் செலுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இந்த வகையில் 4,217 சிமெண்ட் மூட்டைகள் வினியோகத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், முறைகேடு தொடர்பாக, அம்மா சிமெண்ட் கிட்டங்கியை நிர்வகிக்கும் ஒப்பந்தப் பணியாளர்களுக்கு எதிராக மட்டும் குந்தடம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும், முறைகேட்டில் தொடர்புடைய அதிகாரிகளுக்கு எதிராக எந்த வழக்கும் பதியப்படவில்லை எனவும் கூறியுள்ளார்.
இந்த முறைகேடு வழக்கை விசாரிக்கும்படி லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட வேண்டும் எனவும், முறைகேடுகளை தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருவதாகவும், குந்தடம் வட்டார வளர்ச்சி அதிகாரி உள்பட இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும் அரசுத்தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
விசாரணைக்கு பிறகே சம்பந்தப்பட்ட மற்ற அதிகாரிகள் வழக்கில் சேர்க்கப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, அம்மா சிமெண்ட் வினியோகத் திட்டத்தில் நடந்த முறைகேடு தொடர்பான விசாரணை குறித்து, மூன்று வாரங்களில் விரிவான அறிக்கையை தாக்கல் செய்யும்படி அரசுத்தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளிவைத்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.