வேல் யாத்திரையால் மட்டும் கட்சி வளராது, அடிமட்டத்தில் இறங்கி பணியாற்ற வேண்டும்: தமிழக பாஜகவுக்கு அமித்ஷா அட்வைஸ்

அமித்ஷா

தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி மகிழ்ச்சி அளிப்பதாக கூறிய அமித்ஷா,  வேல் யாத்திரை மேற்கொள்வதாலோ, அதனால் கைது செய்யப்படுவதாலோ கட்சி வளராது என்றார்

 • Share this:
  அடுத்த ஐந்து ஆண்டுகள் கடுமையாக உழைத்தால் தமிழகத்தில் பாஜக ஆட்சியை கொண்டுவர முடியும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா, கட்சியினரிடம் நம்பிக்கையை விதைத்துள்ளார்.

  பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக சனிக்கிழமை தமிழகம் வந்தார்.

  சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற அமித் ஷா, தேர்வாய்கண்டிகையில் கட்டப்பட்ட புதிய நீர்த்தேக்கத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார். அத்துடன், 61, 843 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.

  பின்னர், ராஜாஅண்ணாமலைபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கிய அமித் ஷாவை, ஓபிஎஸ், ஈபிஎஸ் மற்றும் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் சந்தித்தனர். அப்போது, தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு, தேர்தல் வியூகம் உள்பட முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசித்துள்ளனர்.

  அதை தொடர்ந்து, பாஜக நிர்வாகிகள் மற்றும் உயர்நிலைக்குழு உறுப்பினர்களுடன், தமிழக தேர்தல் குறித்து அமித் ஷா ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

  அப்போது பேசிய அவர், மத்திய அரசு திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்றும், பூத் கமிட்டியை வலுப்படுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார்.  தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி மகிழ்ச்சி அளிப்பதாக கூறிய அமித்ஷா,  வேல் யாத்திரை மேற்கொள்வதாலோ, அதனால் கைது செய்யப்படுவதாலோ கட்சி வளராது எனவும், அடிமட்டத்தில் இறங்கி பணியாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

  மேலும், மிசோரம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் கடுமையாக உழைத்ததால் தான் ஆட்சியை பிடிக்க முடிந்தது என்றும், அடுத்த ஐந்து ஆண்டுகள் கடுமையாக உழைத்தால் தமிழகத்தில் பாஜக ஆட்சியை கொண்டு வரமுடியும் எனவும் கூறினார். மேலும், நம்மை நாம்தான் நம்ப வேண்டும் எனவும் கட்சியினரிடம் வலியுறுத்தினார்.  இந்த கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், துணைத்தலைவர்கள் அண்ணாமலை, விபி துரைசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, திமுகவிலிருந்து விலகிய எம்எல்ஏ கு.க.செல்வம் பாஜகவில் தன்னை இணைத்துகொண்டார்.

   

  தமிழகத்தில் இரண்டு நாள் பயணத்தை முடித்துக்கொண்ட அமித் ஷா, டெல்லி திரும்பினார்.
  Published by:Yuvaraj V
  First published: