அ.தி.மு.க தலைவர்களுடன் அரசியல் பேச்சு: குரூமூர்த்தியுடன் ஆலோசனை - 2 நாள் பயணத்தை முடித்து டெல்லி புறப்பட்ட அமித்ஷா

அமித்ஷா

தமிழகத்தில் இரண்டு நாள் பயணத்தை முடித்துக்கொண்ட அமித் ஷா, டெல்லி திரும்பினார்.

  • Share this:
    தமிழகத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள அமித்ஷா நேற்று காலை 10.50 மணிக்கு டெல்லியிலிருந்து தனிவிமானத்தில் சென்னை புறப்பட்டார். மதியம் 2 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு வந்தார். தமிழகம் வந்த அமித்ஷாவிற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சென்று வரவேற்றனர். இவர்களுடன் அமைச்சர்கள் ஜெயக்குமார், வேலுமணி, மாஃபா பாண்டியராஜன், தங்கமணி, சிவி சண்முகம், தலைமை செயலாளர் சண்முகம், காவல் துறை டிஜிபி திரிபாதி உள்ளிட்டோர் இருந்தனர். மேலும் மாநில பாஜக தலைவர் எல்.முருகன், முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் ஹெச்.ராஜா உள்ளிட்டோரும் வரவேற்றனர்.

    அதனையடுத்து, சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற அமித் ஷா, தேர்வாய்கண்டிகையில் கட்டப்பட்ட புதிய நீர்த்தேக்கத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார். அத்துடன், 61, 843 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.

    பின்னர், ராஜாஅண்ணாமலைபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கிய அமித் ஷாவை, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் சந்தித்தனர். அப்போது, தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு, தேர்தல் வியூகம் உள்பட முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசித்துள்ளனர்.

    அதை தொடர்ந்து, பாஜக நிர்வாகிகள் மற்றும் உயர்நிலைக்குழு உறுப்பினர்களுடன், தமிழக தேர்தல் குறித்து அமித் ஷா ஆலோசனை மேற்கொண்டனர்.

    அப்போது பேசிய அவர், மத்திய அரசு திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்றும், பூத் கமிட்டியை வலுப்படுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார். தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி மகிழ்ச்சி அளிப்பதாக கூறிய அமித்ஷா, வேல் யாத்திரை மேற்கொள்வதாலோ, அதனால் கைது செய்யப்படுவதாலோ கட்சி வளராது எனவும், அடிமட்டத்தில் இறங்கி பணியாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

    மேலும், மிசோரம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் கடுமையாக உழைத்ததால் தான் ஆட்சியை பிடிக்க முடிந்தது என்றும், அடுத்த ஐந்து ஆண்டுகள் கடுமையாக உழைத்தால் தமிழகத்தில் பாஜக ஆட்சியை கொண்டு வரமுடியும் எனவும் கூறினார்.

    மேலும், நம்மை நாம்தான் நம்ப வேண்டும் எனவும் கட்சியினரிடம் வலியுறுத்தினார். இந்த கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், துணைத்தலைவர்கள் அண்ணாமலை, விபி துரைசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


    சனிக்கிழமை இறுதியாக அமைச்சர் அமித் ஷாவை, ஆடிட்டர் குருமூர்த்தி சந்தித்தார். சுமார் ஐந்து மணி நேரம் நடைபெற்ற ஆலோசனையில், ரஜினியின் அரசியல் நிலைப்பாடு குறித்து குருமூர்த்தி கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும், தமிழக அரசியல் சூழல் குறித்தும் விரிவாக பேசப்பட்டுள்ளது.

    இரண்டாம் நாளில், காலை 8 மணியளவில் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளுடன் அமித் ஷா ஆலோசனை நடத்தினார். ஒரு மணி நேரத்திற்கு மேல் நீடித்த இந்த சந்திப்பில் தமிழக பாஜக தலைவர் முருகன், பாஜக தேசிய அமைப்பு செயலாளர் சந்தோஷ், தேசிய பொதுச் செயலாளர் ரவி ஆகியோரும் உடன் இருந்தனர்.

    பின்னர், காலை 9 மணிக்கு மேல், அமித் ஷாவை, தமிழக உயர் கல்வி அமைச்சர் கே.பி.அன்பழகன் சந்தித்தார். அமித் ஷாவை வழியனுப்புவதற்காகவே வந்ததாக அமைச்சர் தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து, நட்சத்திர விடுதியில் இருந்து அமித் ஷா விமான நிலையம் சென்றார். அங்கு துணை முதலமைச்சர் ஓபிஎஸ், அமைச்சர்கள் வேலுமணி, ரவீந்திரநாத் குமார் எம்.பி. உள்ளிட்டோர் அவரை வழியனுப்பி வைத்தனர். இரண்டு நாள் அரசுமுறைப் பயணத்தை முடித்துக் கொண்டு, தனி விமானம் மூலம் அமித் ஷா, டெல்லி புறப்பட்டார்.
    Published by:Karthick S
    First published: