ஆங்கிலத்துக்கு பதிலாக இந்தியை பயன்படுத்துங்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருந்த நிலையில், இந்தி மாநிலம் மட்டும் போதும், இந்திய மாநிலங்கள் தேவையில்லை என்று அமித் ஷா நினைக்கிறாரா என தமிழக முதலமைச்சரும்
திமுக தலைவருமான
மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37-வது கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. இந்தி மொழியை ஆங்கிலத்திற்கு மாற்றாக ஏற்க வேண்டும்.
இந்தி மொழியை ஆங்கிலத்திற்கு மாற்றாகத்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் மாநில மொழிகளுக்கு மாற்றாக அல்ல என்றும் கூறியிருந்தார். அமித் ஷாவின்
பேச்சு இந்தி பேசாத மாநிலங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. மத்திய அமைச்சரின் கருத்துக்கு பலரும் எதிர்க் கருத்து கூறிவருகின்றனர்.
இந்நிலையில், அமித் ஷாவின் கருத்து தொடர்பாக தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில்,
"ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்தியைப் பயன்படுத்துங்கள்" என்று மத்திய உள்துறை அமைச்சர் @AmitShah சொல்வது இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கும் செயல்!
மேலும் படிங்க: தெர்மாகோல் எடுத்துகொண்டு கிளம்புங்கள்.. செல்லூர் ராஜுவுக்கு செந்தில் பாலாஜி ட்விட்
இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பழுதாக்கும் வேலையை பாஜக தலைமை தொடர்ந்து செய்கிறது. இந்தி மாநிலம்' போதும், இந்திய மாநிலங்கள் தேவையில்லை என்று அமைச்சர் @AmitShah நினைக்கிறாரா? ஒற்றை மொழி என்பது ஒற்றுமைக்கு உதவாது! ஒற்றைத்தன்மை என்பது ஒருமைப்பாட்டையும் உருவாக்காது! ஒரே தவற்றைத் திரும்பத் திரும்பச் செய்கிறீர்கள். ஆனால் அதில் நீங்கள் வெற்றி பெற மாட்டீர்கள்! ” என பதிவிட்டுள்ளார். இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.