ஆதிதிராவிடர்களுக்கு தனி மயானம்: சாதி பிரிவினையை அரசே ஊக்குவிப்பதாக நீதிமன்றம் அதிருப்தி!
ஆதிதிராவிடர்களுக்கு தனி மயானம்: சாதி பிரிவினையை அரசே ஊக்குவிப்பதாக நீதிமன்றம் அதிருப்தி!
சென்னை உயர்நீதிமன்றம்.
தெருக்களில் இருந்த சாதி பெயர்களை நீக்க வேண்டும் என அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிகளுக்கு 'ஆதிதிராவிடர் நலப்பள்ளி' போன்ற பெயர்களை நீக்காதது ஏன் எனவும் கேள்வி நீதிபதி எழுப்பினார்.
ஆதிதிராவிடர்களுக்கு தனி மயானத்தை அரசே அமைத்து கொடுப்பது சாதி பிரிவினையை அரசே ஊக்குவிப்பது போல் உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
வேலூர் மாவட்டம் நாராயணபுரத்தை சேர்ந்த குப்பன் என்பவர் விபத்து ஒன்றில் பலியானார். குப்பன் ஆதிதிராவிட வகுப்பை சேர்ந்தவர் என்பதால் மயானத்திற்கான பாதை மறிக்கப்பட்டதாக கூறப்பட்டது. பின்னர், குப்பனின் உடலை மேம்பாலத்தில் இருந்து கீழே இறக்கி மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக உதவி சொலிசிட்டர் ஜெனரல் கார்த்திகேயன் முறையீட்டை ஏற்ற சென்னை உயர் நீதிமன்றம், தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணிய பிரசாத் அமர்வில் வந்தது.
அப்போது, சம்பவம் நடந்த நாராயணபுரம் கிராமத்தில் இருக்கும் ஆதிதிராவிடர்களுக்கு தனி மயானம் அமைத்துள்ளதாக தாசில்தார் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், தமிழகத்தில் ஆதிதிராவிடர்களுக்கென தனி மருத்துவமனைகளோ, அரசு அலுவலகங்களோ, காவல் நிலையங்களோ இல்லாத நிலையில் அவர்களுக்கு தனி மயானத்தை அரசே அமைத்து கொடுப்பது சாதி பிரிவினையை ஊக்குவிப்பது போல் உள்ளதாக தெரிவித்தனர்.
தெருக்களில் இருந்த சாதி பெயர்களை நீக்க வேண்டும் என அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிகளுக்கு 'ஆதிதிராவிடர் நலப்பள்ளி' போன்ற பெயர்களை நீக்காதது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார்.
மேலும், குப்பன் உடலை பாலத்தில் இருந்து கயிறு கட்டி இறக்கிய சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஆகஸ்ட் 28 ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியர் மற்றும் தாசில்தருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Also see...
Published by:Vinothini Aandisamy
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.