தென்னிந்திய தலைவர்கள் மீது இந்தி திணிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு - தமிழக அரசியலில் மீண்டும் தலைதூக்கும் இந்தி விவகாரம்

தமிழக அரசியலில் மீண்டும் தலைதூக்கும் இந்தி பிரச்னை

தென்னிந்திய தலைவர்கள் மீது இந்தி திணிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து தமிழக அரசியலில் இந்தி விவகாரம் மீண்டும் தலைதூக்கியுள்ளது.

 • Share this:
  இந்தி தெரிந்தால்தான் இந்தியரா என்ற திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழியின் ஆதங்கத்துக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பலரும் கருத்து பதிவிட்டு வரும் சூழலில், அதற்கு பாஜகவில் இருந்து எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. இதனால் ட்விட்டரில் இந்தி திணிப்புக்கு எதிரான போர் மூண்டுள்ளது.

  கடந்த வாரம் டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த திமுக எம்.பி, கனிமொழியிடம் மத்திய தொழில் பாதுகாப்புப் படை பெண் காவலர் இந்தியில் பேசியுள்ளார். தனக்கு இந்தி தெரியாது என்றும் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பேசுமாறு கனிமொழி கூறியதற்கு நீங்கள் இந்தியர்தானே என அந்த பெண் காவலர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தச் சம்பவத்தை தனது ட்விட்டரில் மிகுந்த ஆதங்கத்துடன் கனிமொழி பகிர்ந்திருந்தார்.

  இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடமும் கனிமொழி பேசியிருந்தார். இந்த சம்பவத்திற்கு CISF வருத்தம் தெரிவித்ததுடன், எந்தவொரு குறிப்பிட்ட மொழியையும் யார் மீதும் தாங்கள் திணிப்பதில்லை என விளக்கமும் அளித்திருந்தது.

  Also read: முதலமைச்சரின் பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக எஸ்.வி.சேகர் மீது போலீசில் புகார்

  இந்தப் பிரச்னையில் கனிமொழிக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சியின் தலைவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். தென்னிந்தியத் தலைவர்கள் விமானநிலையம் உள்ளிட்ட பல இடங்களில் இந்தி தெரியவில்லை என அவமதிக்கப்படுவதாகவும் பலர் கூறியிருந்தனர். இந்த நிலை மாற வேண்டும் எனவும் ப.சிதம்பரம் போன்றோர் ட்விட்டரில் பதிவிட்டனர்.

  இந்தி விவகாரத்தை திமுகவும், காங்கிரஸ் கட்சியும் அரசியலாக்குவதாக பாஜகவைச் சேர்ந்த கே.டி.ராகவன் தெரிவித்துள்ளார். கனிமொழியிடம் சி.ஐ.எஸ்.எப் அதிகாரி இந்தி தெரியுமா எனக் கேட்டதற்கும், பாஜகவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் கே.டி.ராகவன் கூறியுள்ளார்.

  அதேசமயம் திமுக தேர்தல் பிரசார வியூகங்களை வகுத்து வரும் பிரசாந்த் கிஷோருக்கு தமிழ் தெரியுமா என பாஜகவின் காயத்ரி ரகுராம் கேள்வி எழுப்பினார். அவருடன் எந்த மொழியில் உரையாடுவீர்கள், அவரை முதலில் தமிழ் படிக்கச் சொல்லுங்கள் எனவும் பதிவிட்டார். இதனால் தமிழக அரசியல் வட்டாரத்தில் மீண்டும் இந்தி பிரச்னை தலைதூக்கியுள்ளது.
  Published by:Rizwan
  First published: